கடையம் விவசாயி பலியான வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min read
அணைக்கரை முத்து
27.8.202
தென்காசி மாவட்டம், வாகைக்குளம், தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் பாலம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் அணைக்கரை முத்து. கடந்த 22ம் தேதி நள்ளிரவு வீட்டுக்கு வந்த 5 வனத்துறையினர் விசாரணைக்காக என் கணவரை அழைத்துச் சென்றனர். தகவலறிந்து என் மகன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். இடையில் சிவசைலம் பாலத்தின் அருகே வனத்துறை ஜீப் எதிரே வந்துள்ளது. ஜீப்பில் என் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். கடையம் அரசு மருத்துவமனைக்கு என் கணவரை கொண்டு சென்றுள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் என் கணவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். எனது கணவரை கடுமையாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிந்துள்ளனர். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரித்துள்ளார். என் கணவரின் உடலில் 18 இடங்களில் வெளிக்காயம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் ரகசியமாக பிரேத பரிசோதனையை முடித்துள்ளனர்.
வனத்துறையினர் தாக்கியதால் தான் என் கணவர் இறந்துள்ளார். எனவே, மூத்த தடயவியல் நிபுணர்களை கொண்டு மீண்டும் மறு பிரேத பரிசோதனையும், முழுமையாக வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்கவும், கொலை வழக்காக பதிவு செய்யவும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இறந்த அணைக்கரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், வீடியோ பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் ஆஜராகி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென கூறினார். அப்போது அரசு தரப்பில், அரசின் நிவாரணம் வழங்க தயார் நிலையில் உள்ளது. வாரிசு பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, தமிழக அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.16க்கு தள்ளி வைத்தார்.