April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம்

1 min read

Bird Sanctuary in Tenkasi District

31-8-2020

தென்காசி மாவட்டத்தில் பறவகைள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நீர்நிலைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

வெளிநாட்டு பறவைகள்

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் வெளிநாட்டு பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தங்கள் நாட்டிற்குச் செல்லும். அப்படி வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வரும் இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். அந்த வகையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளுக்கும் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. தென்மேற்கு பருவமழை காலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள பல குளங்கள் நிரம்பி வழியும். அந்த நீர் நிலைகள் வெளிநாட்டு பறவைகளுக்கு உகந்தாக இருக்கும்.
அந்த வகையில் தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் , இலத்தூர் பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி கடல் போன்று தண்ணீர் காட்சியளிப்பதால் இந்த நீர்நிலைகளை மையமாக வைத்து வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வருகிறது. குறிப்பாக ரஷ்யா, ஆஸ்திரேலியா. சைபீரியா, நைஜீரியா , சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன் , டால்மிஷன், பெலிகான் , நத்தைகொத்தி நாரை, கூழைக்கடா என ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குளக்கரைகள் மற்றும் குளங்களில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன.

சரணாலயம்

தற்போது தென்காசி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும் , பறவைகளை காக்கும் நோக்கிலும் மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர்தயாளன் பறவைகள் சரணாலயம் அமைக்க இடம் தேர்வு செய்யுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார் . அதன்படி மாவட்ட வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தென்காசி மாவட்டத்தில் பறவைகள் அதிகம் வரும் சுந்தரபாண்டியபுரம் பெரியகுளம், செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை ஆய்வு செய்தனர். அந்த குளங்களில் தேவையான நீர்வசதி, பறவைகள் வந்து தங்கி செல்ல மரங்கள் வளர்ப்பதற்கான இடப்பரப்பளவு போன்றவைகள் உள்ளதாக என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
அவர்கள் ஆய்வு செய்த பின்னர் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிப்பார்கள். விரைவில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.