உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை
1 min read
4.9.2020
Father with tearful tribute poster for surviving daughterதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி செல்வி. இவர்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.
கீர்த்தனாவிற்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊரான தேனிக்கு ஜெயபால் மற்றும் செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பண்ணைபுரம் என்னும் பகுதியை சேர்ந்த ஒருவரை மணமகனாக தேர்வு செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உறவினர்களுக்கு திருமணத்திற்கான பத்திரிக்கைகளும் வழங்கப்பட்டன. கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் சென்ற கீர்த்தனா பிறகு வீடு திரும்பவில்லை. வெகு நேரமாகியும், கீர்த்தனா வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது கீர்த்தனா வேறொரு இளைஞருடன் சென்று விட்டார் என்ற தகவல் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனைத் தொடர்ந்து, கீர்த்தனாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். கீர்த்தனா மற்றும் அந்த இளைஞரை போலீசார் அழைத்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
மகளின் முடிவை அறிந்த தந்தை ஜெயபால் கடும் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தார். திருமணம் நெருங்கிய நேரம் பார்த்து மகள் வேறொரு இளைஞருடன் சென்று திருமணம் செய்ததால், அவமானம் அடைந்த ஜெயபால், தனது ஊரில் மகள் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினார். மகள் உயிரோடு இருக்கும்போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.