May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“நீயே (நடிகவேளே) உனக்கு என்றும் நிகரானவன்”

1 min read


“You (MR Radha) are forever equal to you “

17-9-2020
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் வலிந்து திணிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளைக் கேட்கும்போது கடுமையாகவே எரிச்சல் வருவதுண்டு. ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் நாடகங்களிலும், சினிமாவிலும் கரகரத்த குரலில் இயல்பாகவே பேசிய பஞ்ச் டயலாக்குகள் இன்றும் கூர்மையாக ஒலிக்கின்றன. அந்த குரலுக்குச்சொந்தக்காரர், எம்.ஆர். ராதா.
ரத்தக்கண்ணீர் படம் முழுக்க அவர் நடிப்பும், வசனங்களும் கொடி கட்டிப்பறந்தன. “ஒன் மேன் ஆர்மி” போல படம் முழுவதும் அவர் நின்று அடித்த அடியை யாராலும் மறக்கமுடியாது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், மக்கள் திலகம் எம்ஜிஆர் கோலோச்சிய காலத்திலும் எம்ஆர் ராதாவுக்கு தனி இடமும், மவுசும் உண்டு. அந்தக்கால கதாநாயகர்களுக்கு இணையாக லட்சங்களில் சம்பளம் வாங்கியவரும் எம்ஆர் ராதா தான்.
சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் எம்ஆர் ராதா வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர பாத்திரமாக கலக்கியிருக்கிறார். அவர் வில்லனாக நடிக்கும்போது கூட இடைஇடையே உதிர்க்கும் வசனங்களில் சிரிப்பை வரவழைத்து கைதட்டல்களை அள்ளுவார். பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாலும் பழமும், பச்சை விளக்கு படங்களில் இவரது வில்லத்தனத்தை சிரித்துக்கொண்டே ரசிக்கமுடியும். வில்லன் என்றால் கோபம் தானே வரவேண்டும். ஆனால் அவரது வில்லத்தனம் தனி பாணி. அது அவருக்கு மட்டுமே உரித்தானது.

“ஒரு மீன் துண்டு கிடைக்காததால் வீட்டை விட்டே வெளியேறியவர்”

இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜகோபாலுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது செல்லமகனாக 14.04.1907 ஆண்டு மதராஸ் ராஜாகோபாலன் ராதா கிருஷ்ணன் என்கிற ராதாகிருஷ்ணன் பிறந்தார். இந்த நீண்ட பெயரைத்தான் சுருக்கி “எம்.ஆர்.ராதா” என்று வைத்துக் கொண்டார்.
எம்ஆர் ராதாவுக்கு படிப்பு ஏறவே இல்லை. இளம் வயதிலேயே நாடக ஈடுபாடு அதிகம் இருந்தது. படிக்கவில்லையே தவிர கேள்வி ஞானம் உண்டு. அதோடு முன்கோபமும் அதிகம்.
வீட்டில் ஒரு நாள் சாப்பிடும்போது, சம்பாதிக்கக்கூடிய அண்ணனுக்கு ஒரு மீன் துண்டு கூடுதலாக அம்மா கொடுத்ததால் கோபித்துக்கொண்டு வெளியேறியவர், கூலி வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கினார். பின்பு ஒரு நாடக கம்பெனியில் மெக்கானிக் ஆக வேலை பார்த்தவர், ஒரு நாள் ஒரு நடிகர் வராததால் அந்த வேடத்தில் நடித்தார். அவர் நடிப்பையும், வசனம் பேசிய விதத்தையும் கண்டு அசந்த கம்பெனி முதலாளி, எம்ஆர் ராதாவை தொடர்ந்து நடிக்கவைத்தார். ஒரு கட்டத்தில் எம்ஆர் ராதாவே நாடகம் நடத்தத் தொடங்கி விட்டார். அவர் நடித்த ராஜசேகரன் என்ற நாடகத்தை மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சினிடோன் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது. அதில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து சினிமாவிலும் அறிமுகமானார், எம்.ஆர்.ராதா. ஆர்.பிரகாஷ் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். 1937 ஆம் ஆண்டு படம் வெளிவந்தது. படப்பிடிப்பின் போது குதிரை மீதிருந்து விழுந்ததில் எம்.ஆர். ராதாவின் கால்முறிந்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்குப் போகவில்லை.

பிறகு உடல்நிலை தேறியபிறகு நண்பர்களுடன் இணைந்து ‘பம்பாய் மெயில்’ என்ற படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சந்தனத் தேவன்’, ‘சத்யவாணி’, ‘சோகமேளா’ படங்களில் நடித்தார். படங்கள் சுமாராக போயின.
பின்பு, நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் தயாரித்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் தான் எம்.ஆர்.ராதாவை புகழேணியில் கொண்டு சென்றது.

ஒரே ஆண்டில் 22 படங்கள்

1959ல் வெளிவந்த ‘பாகப் பிரிவினை’ படம், எம்.ஆர். ராதாவை முக்கியமான நடிகராக்கியது. 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாவமன்னிப்பு’, ‘பலேபாண்டியா’, ‘பாலும் பழமும்’, ‘குமுதம்’ என்று பல படங்களில் ராதாவின் நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக்கியது.

1962ல் எம்.ஆர்.ராதா நடித்த 22 படங்கள் வெளிவந்தன.இதிலிருந்து தமிழ் சினிமாவில் எம்.ஆர் ராதா எவ்வளவு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினிகணேசன் என்றுபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 1966 ஆம் ஆண்டுக்குள் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 114.

அப்போது பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஜிஆருடன் நடித்துக்கொண்டு இருந்த ராதா, படத்தயாரிப்பாளருக்கு பண உதவியும் செய்தார். என்றாலும் எம்ஜிஆர் கால்ஷீட் கிடைக்காமல் படம் தாமதமானது. இது தொடர்பாக எம்ஜிஆரை சந்திக்க, 12-01-1967 அன்று ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றபோது தான் தமிழகமே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு விட்ட எம்ஆர் ராதா தன்னைத்தானேயும் சுட்டுக்கொண்டார். நல்லவேளையாக இருவருமே காயம்பட்டாலும் பிழைத்துக்கொண்டனர்.
இந்த வழக்கில் எம்ஆர் ராதா தண்டிக்கப்பட்டு 7 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. பின்பு அவர் வயதை கருத்தில் கொண்டு தண்டனைக்காலம் 4 வருடம் 3 மாதமாக குறைக்கப்பட்டது .


இதைக்கூட பின்னொரு முறை ராதா வேடிக்கையாகவே பேசினார். “என்ன கன்ட்ரி மேட் துப்பாக்கியா இது? இருவருமே குண்டடி பட்டு பிழைச்சுக்கிட்டோம்” என்றார்.

மற்றொரு முறை மலேசியாவில் பேசும்போது, “நானும் (எம்ஜி) ராமச்சந்திரனும் பிரண்ட்ஸ். நண்பர்களுக்குள்ள சண்டை வந்தா அடிச்சுக்கிறதில்லையா? அன்னைக்கு என் கையில துப்பாக்கி இருந்துச்சு, சுட்டுட்டேன்” என்றார், மிகவும் சகஜமாக.

கலைவாணரையும் சுடத்திட்டமிட்ட ராதா

பொதுவாக எம்ஜிஆரை எம்ஆர் ராதா சுட்டது பலரும் அறிந்த விஷயம். ஆனால், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனையும் எம்ஆர் ராதா சுட்டுத்தள்ள திட்டமிட்ட கதை நிறைய பேருக்குத்தெரியாது.
இதுபற்றி, படத்தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் எழுதியிருக்கும் பதிவை இங்கே பார்ப்போம்.

“ரத்தக் கண்ணீர்” நாடகத்துக்கு முன், எம்.ஆர்.ராதா நடித்த நாடகங்களில் மிகவும் புகழ் பெற்ற நாடகம் “இழந்த காதல்”. ஜெகதீஷ் என்ற வில்லனின் வேடத்தில் ராதா நடித்திருந்த அந்த நாடகம் சேலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்தது.

“அந்த நாடகத்திற்கு அப்போது இருந்த வரவேற்பு இப்போது உள்ள சினிமாவுக்குக் கூட இருக்காது”என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக் கிறார், சிவாஜி.

“இழந்த காதல்”நாடகத்தில் எம்.ஆர்.ராதா சவுக்கடி காட்சி ஒன்றில் நடிப்பார்.அந்தக் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற தால், “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி காட்சியை பார்க்கத் தவறாதீர்கள்”என்று சேலம் முழுக்க அப்போது போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தினார்கள்.

அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக பல அரசியல் கட்சித் தலைவர்களும்,முக்கியமான பிரமுகர்களும் சேலத்துக்கு படையெடுக்கத் தொடங்கினர்.அப்படி வந்தவர்களில் முக்கியமான ஒருவர் அறிஞர் அண்ணா.அப்போது ஈரோட்டிலிருந்து வந்து கொண்டிருந்த தந்தை பெரியாரின் “குடியரசு”பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் “இழந்த காதல்” நாடகத்தைப் பார்ப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் ஈரோட்டிலிருந்து சேலத்துக்கு பஸ்சிலேயே வந்தார்.

அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அதைப் படமாகத் தயாரிக்கின்ற நோக்கத்துடன் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர் சுந்தரம் உட்பட பலரும் அந்த நாடகத்தைப் பார்க்க வந்தனர். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அந்த நாடகத்தில் கதாநாயகி வேடத்தில் உயிரோட்டமுள்ள நடிப்பைத் தந்த மாரியப்பன் என்ற நடிகருக்கு ஈடாக ஒரு கதாநாயகி அமைவது கடினம் என்று அவர்கள் அனைவருமே கருதியதால் அந்த நாடகத்தைப் படமாக்க அவர்கள் முன்வரவில்லை.

அதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்த நாடகத்தைப் படமாக்க முன் வந்தார்.”இழந்த காதல்” நாடகத்தைப் பொருத்தவரை அந்த நாடகத்திற்கு முதுகெலும்பாக இருந்தவர், எம்.ஆர். ராதா. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக படைஎடுத்து வந்தார்கள் என்றால் அதற்குக் காரணமும் அவர் தான்.அதையெல்லாம் நன்கு அறிந்திருந்த போதிலும் “இழந்தகாதல்” கதையை எம்.ஆர்.ராதா இல்லாமல் படமாக்கத் திட்டமிட்ட என்.எஸ். கிருஷ்ணன் அப்படி ஒரு முடிவை தான் எடுத்ததற்கான காரணத்தை மட்டும் எவரிடமும் கூறவில்லை.

“இழந்த காதல்” நாடகத்தில் தான் ஏற்று நடித்த பாத்திரத்தில் கே.பி.காமாட்சி என்ற நடிகரை நடிக்க வைத்து அந்தக் கதையைப் படமாக்க கலைவாணர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த எம்.ஆர். ராதா ஆத்திரத்தின் எல்லைக்கே போனார்.
தனது புகழைக் குலைக்கும் செயலில் கலைவாணர் ஈடுபட்டுள்ளார் எனக்கருதி, அவரை மன்னிக்க மனது மறுத்ததன் காரணமாக அவரை சுட்டுத் தள்ளிவிடுவது என்ற முடிவுக்கு வந்த எம்.ஆர். ராதா உளுந்தூர் பேட்டையிலே ஒரு ஆளைப் பிடித்து துப்பாக்கி வாங்கியது மட்டுமின்றி குறி பார்த்து சுடுவதற்காக தினமும் தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

இதற்கிடையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை துப்பாக்கியால் சுடுவதற்கு எம்.ஆர்.ராதா திட்டமிட்டு இருக்கும் விஷயம் “இழந்த காதல்”நாடகத்தை நடத்திக் கொண்டிருந்த நாடக சபாவின் சொந்தக்காரரான யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளைக்கு தெரிய வரவே என்.எஸ்.கிருஷ்ணனிடம் அதைப்பற்றி தெரிவித்த அவர் எச்சரிக்கையாக இருக்குமாறு கலைவாணருக்கு அறிவுரை கூறினார்.

ஆனால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லை.சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று முடிவெடுத்த அவர் தன் காரில் ஏறி கரூருக்கு விரைந்தார்.

அப்போது எம்.ஆர்.ராதா கரூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்.
யாரைச் சுடுவதற்காக எம்.ஆர்.ராதா பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தாரோ அந்தக் கலைவாணரே தன்னுடைய எதிரிலே வந்து நின்றதும் எம்.ஆர்.ராதாவிற்கு ஒன்றும் ஓடவில்லை. இருப்பினும் கலைவாணர் மீது இருந்த அளவில்லாத மரியாதை காரணமாக தன்னையும் அறியாமல் அவர் எழுந்து நின்றார்.

“எண்டா உனக்கு புத்தி இருக்கா?”என்று எம்.ஆர்.ராதாவைப் பார்த்து கேட்ட கலைவாணர் அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என்னடா யோசிக்கறே?உனக்குப் புத்தி இருக்கான்னு கேட்கிறேன்”என்றார்.அதற்கும் எம்.ஆர்.ராதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“பணம்,பங்களா,காரு,வயசு இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நடிப்புன்னு வரும்போது அதை உனக்கு சொல்லிக் கொடுக்கிற யோக்கியதையும்,தகுதியும் எனக்கு இருக்காடா?கே.பி.காமாட்சியை போட்டா இப்படி நடிக்காதே,அப்படி நடிக்காதேன்னு என்னால சொல்ல முடியும். உன் கிட்டே அப்படிச் சொல்ல முடியுமா?சொன்னா அவமரியாதையாக இருக்காது? பணத்துக்காக அந்த அவமரியாதையை பொறுத்துக்கிறதுக்கு நீ வேண்டுமானால் தயாராக இருக்கலாம்.ஆனால் என்னால பொறுத்துக்க முடியாது. அதனால்தான் உன்னை அந்தப் படத்திலே நான் போடலே.புரிஞ்சுதா?இதுக்கு அப்புறமும் என்னை சுடணும்னு உனக்குத் தோணினா என்னை நல்லா சுடு”என்று கலைவாணர் கூறியதும் துப்பாக்கியை எடுத்து கலைவாணரிடமே கொடுத்த எம்.ஆர்.ராதா “இனிமே சுடறதா இருந்தா நீங்கதான் என்னைச் சுடணும்”என்றார். அவர் அப்படிச் சொன்னவுடன் அப்படியே ராதாவை கட்டி அணைத்துக் கொண்டார் கலைவாணர்.

“அவர் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டவுடன் என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.என்னுடைய வாழ்நாளில் அன்றுதான் முதன் முதலாக நான் அழுதேன்.நான் அழுவதைப் பார்த்துவிட்டு கலைவாணரும் கண்ணீர்விட்டு அழுதார்”என்று குறிப்பிட்டுள்ளார், எம்.ஆர்.ராதா.
உணர்ச்சிகளின் குவியல்தான் கலைஞர்களின் மனது என்பதற்கு இந்த சம்பவத்தை விட வேறென்ன சாட்சி வேண்டும்?”
இவ்வாறு சித்ரா லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.


எம்ஆர் ராதா தன் மனதில் பட்டதை பளீர் எனச்சொல்வது போலவே செயலிலும் இறங்கத்துணிவார் என்பதற்கு உதாரணங்கள் தான், கலைவாணரை அவர் சுட முடிவெடுத்ததும், எம்ஜிஆரை சுட்டதும்.

“ராதாண்ணே…”–சிவாஜியின் மரியாதை

நடிப்புலக மன்னனாக சிவாஜிகணேசன் திகழ்ந்தபோதும், அவர் “நடிப்பில் ராதா அண்ணே, பாலையா அண்ணே…இவுங்களுக்குப்பிறகு தான் நான்” என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

அவ்வாறு நடிகர் திலகத்தால் அண்ணன் என்று மதிக்கப்பட்ட எம்ஆர் ராதா, 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத்தொடங்கி, 5 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்தவர். பகுத்தறிவுக் கருத்துகளுக்காக தந்தை பெரியாரைப்பின்பற்றிய எம்ஆர் ராதா, அவரிடம் இருந்தே “நடிகவேள்” என்ற பட்டம் பெற்றதை மிகவும் சிறப்பாகக்கருதினார்.
நடிகவேள் என்றால் அன்றும் இன்றும் என்றும் அவர் ஒருவரே. பலே பாண்டியா படத்தில் எம்ஆர் ராதாவைப்பார்த்து, சிவாஜி பாடுவது போல் வரும் “நீயே உனக்கு என்றும் நிகரானவன்” என்ற வரி, தெரிந்தோ தெரியாமலோ எம்ஆர் ராதாவுக்காகவே எழுதப்பட்ட சத்திய வாக்கு என்று தான் சொல்லவேண்டும்.

சிறைக்கு சென்று திரும்பியபிறகும் சில படங்களில் நடித்த எம்ஆர் ராதா, இறுதிக்காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி உறையூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி காலை 7 மணியளவில் காலமானார். அந்தநாள் தந்தை ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்த நாளாகவும் இருந்தது.பெரியாரின் சீடராக இருந்தவர், பெரியாரின் பிறந்தநாளிலேயே மறைந்தது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய விஷயமாகும்.

மணிராஜ்,
திருநெல்வேலி.



About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.