நொடிந்த நிறுவனங்களின் வசதிக்காக திவால் சட்டத்தில் திருத்தம்
1 min readAmendment to the Bankruptcy Act for the convenience of bankrupt companies
19-9-2020
கொரோனா ஊரடங்கு காரணமாக நொடிந்த நிறுவனங்களின் வசதிக்காக திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தொழில் நிறுவனங்கள்
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் நலிந்துவிட்டன. அந்த நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கக்கின்றன.
கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் வங்கிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, தொழில் நிறுவனங்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், கடன் நொடிப்பு மற்றும் திவால் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நிறைவேற்றம்
இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பிறகு மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரையிலான காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து இந்த மசோதா மூலம் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறும்போது, “மார்ச் 25-ந் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம்” என்று தெரிவித்தார்.