இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை
1 min read25/9/2020
Teen girl strangled to deathதூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை அடுத்த தெற்கு ஆத்தூர், நாடார் தெருவைச் சேர்ந்த பெருமாள் நாடார் மகன் சரவணன் (35). இவருக்கும், ஆழ்வார்திருநகரி அருகே மணல்குண்டைச் சேர்ந்த சித்திரைவேல்- மாரிகனி தம்பதி மகள் ரம்யாவுக்கும் (30) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவபார்வதி (5) என்ற மகளும், கணேஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.
சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சரவணன், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவியதால் குடும்பத்துடன் சொந்த ஊரான ஆத்தூருக்கு வந்து விட்டார். இங்கு லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார்.
லோடுமேன் வேலைக்காக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி என வெளியூர்களுக்கு சரவணன் அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவரது மனைவி ரம்யாவின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்றிரவும் சரவணன், மனைவி ரம்யாவிடம் தகராறு செய்தார். ரம்யாவும் எதிர்த்து பேசவே, ஆத்திரம் அடைந்த சரவணன் அவரது கழுத்தை நெரித்தார். மேலும் அவர் பிழைத்து விடக் கூடாது என்று எண்ணி வாளி தண்ணீரில் அவரது முகத்தை மூழ்கடித்தார். இதில் மூச்சு திணறி ரம்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இன்று காலை தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் சரவணனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கணவரே கழுத்தை நெரித்து, தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.