எஸ்.பி.பி. உடல் அடக்கத்திற்கு பொதுமக்கள் வரவேண்டாம்- போலீஸ் அறிவுரை
1 min readDo not come to public burial of SPB- Police advice
26-/9/2020
மரணம் அடைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் இன்று தாமரைபாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. அங்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (எஸ்.எஸ்.பி.) வெள்ளிக்கிழமை பகர் 1.04 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்த வந்ததால் கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், அங்கு தொடர்ந்து எஸ்.பி.பியின் உடலை வைத்திருக்காமல் அவரது இறுதிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.45 மணிக்கு வாகனம் மூலம் தாமரைப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் அவரது ரசிகர்கள், அவரது உடலை சுமந்து சென்ற வாகனத்தை செல்பேசிகளில் பதிவு செய்தபடி காணப்பட்டனர்.
பொதுமக்கள் வரவேண்டாம்
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சிக்கு இன்று (சனிக்கிழமை) பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நல்லடக்கம் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு மரியாதையுடன்…
அரசு மரியாதையுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இன்று தமிழக காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படம்.
கர்நாடகா அரசு மரியாதை
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தது. இதையொட்டி அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பறக்க விடப்பட்டது.