கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த 7 பேர் கைது
1 min read
7 people have been arrested for making a shepherd fall on his leg near Kayathar
14/10/2020
கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலில் விழ வைத்த வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கு (60). இவர்கள் 2 பேரும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சியில் பால்ராஜ் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு சிவசங்கு, அவரது மகன் சங்கிலிபாண்டி (19), உறவினர்களான கார்த்திக் (23), பெரியமாரி (47), வீரைய்யா (42), மகேந்திரன் (20), மகாராஜன் (24) ஆகியோரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, ஆடு மேய்க்கும் தகராறில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கு தரப்பினர் பால்ராஜை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து, மிரட்டி உள்ளனர். இதை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவச்செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
7 பேர் கைது
இதுகுறித்து பால்ராஜ் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிகண்ணன், நாராயணசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கு, சங்கிலிபாண்டி, கார்த்திக் உள்பட 7 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவில்பட்டி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.