நீட் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் இருந்து நீக்கம்
1 min readNEED Exam Results Removal from Website
17/10/2020
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்டதால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நடத்தி முடிக்கப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி மற்றும் இந்த மாதம்( அக்டோபர்) 14-ந் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் இந்தத் தேர்வை, 13 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தமிழ் நாட்டில் மட்டும் 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினார்கள்.
நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. இதில், 7 லட்சத்து 71 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக சர்ச்சை எழுந்தது. தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி இருந்ததாகவும், மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த பக்கத்தில், முடிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம், மாற்றப்படலாம் அல்லது தற்காலிகமாக மாற்ற முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.