காஷ்மீரில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
1 min readTerrorists shot dead 3 BJP executives in Kashmir
29/10/2020
காஷ்மீரில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகள்
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு விலக்கிக் கொண்டது. இதனால் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டது.
அதோடு காஷ்மீருக்குள் இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாரதீய ஜனதா மீது பயங்கரவாதிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இந்த ஆத்திரம் 3 பாரதீய ஜனதா நிர்வாகிகளை கொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது. அதன்விவரம் வருமாறு:-
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்ஹம் மாவட்டம் ஒய்கே பூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷித் பேக் குல்ஹம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்துவந்தார்.
அதேபோல் அப்பகுதியை சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடா ஹசன் யாதூ ஆகிய இருவரும் பாரதீய ஜனதா மாவட்ட நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தனர்.
பாஜக நிர்வாகிகள் 3 பேரும் இன்று( வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் ஒய்கே பூரா பகுதியில் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை பயங்கரவாதிகள் இடைமறித்தனர்.
சுட்டுக்கொலை
பின்னர் அவர்கள் பாரதீய ஜனதா நிர்வாகிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததுமு் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.