அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
1 min read
Governor approves 7.5 percent quota bill for government school students
30/10/2020
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
7.5 சதவீதம் ஒதுக்கீடு
மருத்துவ படிப்புக்கு நீட் என்ற நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தியபின்னர் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள் போதிய அளவில் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் ஆன நிலையில் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இதனால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
ஆணை
ஆனாலும் கவர்னர் உடனடியாக கவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தனது முடிவை பரிசீலனை செய்ய 4 வாரங்கள் ஆகும் என்று கூறினார். இதனால் மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியாமல் போகும் என்று கூறப்பட்டது.
இதனால் நேற்று தமிழக அரசு அந்த மசோதாவை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கவர்னர் ஒப்புதல்
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் செப்டம்பர் மாதம் 26-ந்தேதி எழுதிய கடிதத்துக்கு நேற்றுதான் சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்ததாகவும், சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளதால் விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு உள்ளது.
300 சீட்
இந்த ஆணையால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 300 பேர் வரை மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.