“அரசு மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் சேவை”–கொரோனாவில் இருந்து மீண்ட நீதிபதி நெகிழ்ச்சி
1 min read
Dedicated service in government hospitals “- Judge Flexibility overcoming corona
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்து வரும் அரசு மருத்துவமனைகளை, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நீதிபதி பாராட்டியிருக்கிறார்
முடியப்போகும் 2020-ம் ஆண்டு உலக வரலாற்றில் கொரோனா மயப்படுத்தப்பட்ட ஆண்டாக பதிவாகி விட்டது. அரசன் முதல் ஆண்டி வரை ஓடி ஒளிய வைத்தது எதுவென்றால் அது கொரோனா எனப்படும் “தீநுண்மி” தான்.
இதில் மூச்சடங்கியவர்களும் உண்டு. மூச்சுத்திணறி மீண்டு வந்தவர்களும் உண்டு. அப்படி அவர்கள் மீண்டு வரக்காரணம், தன்னுயிரையும் பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மருத்துவத்துறை தான்.
முழுக்க முழுக்க இலவச சிகிச்சை
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,71,619.
அவர்களில், 7,47,752 பேர், மருத்துவ சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு குணம் அடைந்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் ஒரு காசு கூட செலவின்றி சிகிச்சை பெற்றவர்கள்.
தனியார் மருத்துவமனைகள் பலவும் கார்ப்பரேட் மயமாகி விட்ட சூழலில் அங்கு கொரோனா சிகிச்சை என்றால் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை மட்டுமின்றி, வேளாவேளைக்கு உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு, கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து இன்று வரை 8 மாத காலமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என யாரும் விடுப்பு எடுத்தது கிடையாது. அரசு அவர்களுக்கு சிறப்பாக சலுகை எதுவும் வழங்காத நிலையிலும், கொரோனா முன்களப்பணியாளர்களாக அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகிறார்கள்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீதிபதி
அரசு மருத்துவமனைகளின் இந்த சேவை உணர்வைப் பாராட்டி, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நீதிபதி ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த நீதிபதியின் பெயர், ஏஎஸ் ரவி. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) சிறப்பு நீதிபதியாகப்பதவி வகித்து வரும் அவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 17-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப்பார்த்தபோது, நுரையீரலில் 10 சதவீத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவர் தற்போது முழு குணம் அடைந்து விட்டார். எனவே, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய கையோடு அவர், கோவை அரசு மருத்துவனையின் டீனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
‘‘எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சைக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மட்டும் நான் நன்றி கூறவில்லை.
மற்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான ஆலோசனைகள், ஊக்குவிப்பு, அரவணைப்பு ஆகியவற்றுக்கும் சேர்த்தே இந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். சரியான நேரத்தில் இங்கு அளிக்கப்படும் ஊசி, மருந்து, மாத்திரைகள் நோயாளிகள் விரைவில் தேறிவர உதவுகின்றன.
குறிப்பாக செவிலியர்கள் ஜூடி, சாந்தி ஆகியோர் சகோதரிகள் போல கவனித்துக் கொண்டனர். சிறந்த நிர்வாகம், உயர்தர மருந்துகள், சுகாதாரமான சூழல், ஊட்டச்சத்து மிக்க உணவு எனத் தனியார் மருத்துவமனைகளைவிட இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிந்தும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவது மெச்சத்தக்கது. எனவே அவர்களுக்கு சம்பள உயர்வு, உள்ளிட்ட உரிமைகளை இரட்டிப்பாக்கி வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.”
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
–மணிராஜ்.