கடையநல்லூரில் பெண் குழந்தை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை
1 min readGirl for child sale in Kadayanallur for Rs. 20,000
7/12/2020
கடையநல்லூரில் பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பனிமலர். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அதை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறியதை அடுத்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
விற்பனை
இந்த நிலையில் வறுமையில் வாடிய முருகன்-பனிமலர் தம்பதியினர் தங்களது பெண் குழந்தையை விற்க முடிவு செய்தனர். அவர்கள் இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த சரசுவதியிடம் கூறினார்கள்.
அதன்பின் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை தேரடி தெருவைச் சேர்ந்த பொன்னுத்தாய் மூலம் குழந்தையை விற்க பேரம் பேசினர். அதன்படி முருகன்-பனிமலர் தம்பதியினர் தங்களது குழந்தையை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராணியிடம் ரூ.20 ஆயிரத்துக்கு விற்றனர்.
பனிமலருக்கு குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரியில் பதிவாகி இருப்பதால் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக முருகனின் வீட்டுக்கு கிராம சுகாதார செவிலியர் சென்றார். அப்போது அங்கு குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விசாரித்தபோது, குழந்தையை விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செலினா கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன், பனிமலர், சரசுவதி, பொன்னுத்தாய், ராணி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.