சூரப்பா பிரச்சினை; கமல்ஹாசனுக்கு அமைச்சர் பதிலடி
1 min read
Surappa issue; Minister retaliates against Kamal Haasan
7/12/2020
அண்ணாப்பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சூரப்பா
அண்ணாப் பல்கலைக்கழ துணை வேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, தமிழகத்தில் இதற்கு தகுதியான நபர் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இன்னமும் தொக்கி நிற்கிறது. அந்த நிலைபாட்டில் இப்போதும் மாற்றமில்லை. ஆனால், வந்தவரோ, வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின்முன் நெழிந்து குழையாதவர். அண்ணாப் பல்கலைக்கழகத்தை உலகத் தரத்துக்கு மாற்ற வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களாக நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லையென்றால் உடைப்பதுதானே இவர்களது வழக்கம்.
மொட்டைக் கடிதம்
எவனோ ஒருவர் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை குழு அமைத்துள்ளனர். மொட்டையில் முடி வராததால், மக்கள் வரிப் பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடைபோட்டு காத்திருக்கின்றனர். முறைகேடாக அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், அண்ணாப் பல்கலைக்கழக வாகனங்களையும் பயன்படுத்தியவர்களையும் விசாரித்துவிட்டீர்களா? உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, என அத்தனை துறைகளும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே விசாரித்துவிட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்கள் கடமை.
கறைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், தற்போது மதிப்பெண் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறீர்களா? சூரப்பாவின் கொள்கைச் சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவன் தன்னுடைய நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசன் நான் சும்மா இருக்க மாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது. இதுஒரு கல்வியாளர்க்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை அல்ல.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருந்தார்.
அமைச்சர் பதில்
கமல்ஹாசனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில் அளித்துள்ார். தர்மபுரியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போகிறோம் என்பதற்காக எதை எதையோ பேசி கொண்டிருக்கிறார். சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது என்னிடத்தில் எந்த ஊழலும் இல்லை. நான் நியாயமானவன், அப்பழுக்கற்றவன், நான் விசாரணையை எதிர் கொள்வேன் என்று கூறிய சூரப்பா மதுரையில் ஒருவரை வைத்து வழக்கு போட வைத்து, அதில் தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.
சம்பந்தம் இல்லை
ஆனால் மதுரைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. அவர் வழக்கு போட வேண்டுமென்றால் சென்னையில் வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். அவரது மடியில் கனமில்லை என்றால் வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. பேராசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்திற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
துணைவேந்தர் நியமனத்திற்கு தேடுதல் குழுவை அமைப்பது மட்டுமே அரசின் பணி. இதில் தேடுதல் குழு தான் விண்ணப்பங்களை பெற்று, 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்பி வைக்கிறது. எனக்கு பயமில்லை, விசாரணையை எதிர் கொள்கிறேன் என்று சொன்னவர், எதற்காக மதுரையில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். பேராசிரியர் நியமனத்தில் ஏற்கனவே முன்னாள் துணை வேந்தர் கொடுத்த பத்திரிகை பேட்டிக்காக, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே நடிகர் கமல்ஹாசன் பேசி கொண்டிருக்கிறார். அவர் உண்மை நிலையை அறிந்து அந்த அறிக்கையை சொல்லவில்லை.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்