தென்காசி அருகே கள்ளக்காதல் கொலை- 3 பேர் கைது
1 min read
Money lender murdered near Tenkasi; 3 arrested.
3.8.2026
தென்காசி அருகே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்த மாடசாமி மகன் பொதிகாசலம் என்ற சுதாகர் (வயது 45). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் ஒரு மாந் தோப்பில் யாரோ சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தீவிர விசாரணையில் இந்த சம்பவத்தில் இலஞ்சியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 35) பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 28) மற்றும் இலஞ்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பதாக தெரிய வந்தது. போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இறந்து போன சுதாகர் தென்காசியில் உள்ள ஒரு பேக்கரிக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அங்கு மாரியப்பனின் மனைவி வித்யா (வயது 33) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் சுதாகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதுகுறித்து மாரியப்பனுக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் கண்டித்து உள்ளார். சுதாகர் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் வித்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். மாரியப்பனிடம் சுதாகர் மனைவியை விட்டு விட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மாரியப்பன் ஆத்திரம் அடைந்துள்ளார். நேற்று இதுகுறித்து பேசுவதாக கூறி சுதாகரை இலஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். சுதாகர் அங்கு சென்றதும் மாரியப்பன், ஐயப்பன், 17 வயது சிறுவன் ஆகியோர் சுதாகரை வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கைதான மாரியப்பன், ஐயப்பன் ஆகியோர் செங்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.