June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாரதி/ சிவகாசி முத்துமணி

1 min read

Bharathi in Kadayam By Sivakasi Muthumani

11/12/2020

மகாகவி பாரதியின் பிறந்தநாளான இன்று இந்தகட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்,

“ஓய் பாரதி உமக்குத் தொழில் என்ன?” “என்னய்யா கேட்டீர்?”.
” ஆமா ஓய், நீர் என்ன தொழில் செய்கிறீர்? சொல்லும்”
இப்படி ஒரு உரையாடல் மகாகவி பாரதியோடு தொடருமானால், அவர் சொல்வார்,

 " நமக்குத் தொழில் கவிதை."

“கவிதை எழுதுவது ஒன்றே என் தொழில்”, என்று கூறிவிட்டுச் சற்றுச் சிந்திப்பார்
“.ஐயோ நமக்குத் தொழில் கவிதை என்று கூறிவிட்டோமே, நம் கூற்று,’கவிதை எழுதி அதில் கிடைக்கும் பொருளைக்கொண்டு பிழைப்பு நடத்துவது என் தொழில்’எனப் பொருள் பட்டுவிடுமே?.”

  அப்படியானால் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான், நாம் கவிதை எழுதுகிறோமா? சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவகவிதை இல்லையா நம் கவிதை?

பிழைப்புக்காகத்தான் கவிதை என்பதை, என்று ஏற்றுக்கொண்டால், பின்னர் நம் கவிதையின் பாடுபொருள் என்னவாக இருக்கும்?. காமன், சோமன் என்று கண்டவனைப் பாட வேண்டும். வயிற்றை நிரப்புவதற்கு எதைப் பாடினால் பொருள் கிடைக்குமோ, எவனைப் பாடினால் வயிறு நிறையுமோ, அவற்றையே கவிதையின் பாடுபொருளாகக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே?.

   சமஸ்தானத்தையே போற்றிப் பாடாமல்! மன்னரால் கிடைத்த ஆஸ்தானப் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டுத்தானே, விடுதலையையும் சமூகப் புரட்சியையும் பாடிக் கொண்டிருக்கிறோம். 

கண்டதையும் கண்டவனையும் பாடி, அதில் வரும் பொருள் கொண்டு குடும்பத்தை நடத்துவது குறுகிய நோக்கத்தோடு பெருவாக்கும் பயனற்ற பிழைப்பைத் தான் பாரதி மேற்கொள்கிறான், என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. நாயும் பிழைக்குமே இந்தப் பிழைப்பு என்று எண்ணி, அடுத்தகணம்,தான் சொன்ன பதிலோடு மேலும் ஒருவரி சேர்த்துச் சொல்வான். என்னுடைய தொழிலா? கேட்டுக் கொள்…

 " நமக்குத் தொழில் கவிதை
   நாட்டுக்கு உழைத்தல்" 

  சமுதாயத்திற்கும் நாட்டிற்காகவும் வாழ்வதுதான் என் தொழில். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவன்றோ? பாட்டின் மூலம் இந்த இந்த நாட்டிற்கு இந்தச் சமுதாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டும். உணர்வு செத்துக் கிடக்கின்ற இந்தியச் சமுதாயத்தில் விடுதலை வேட்கையைத் தூண்டி, சாட்டையால் அடித்து  அவர்கள் நீடுதுயில் நீக்கி, எழுப்பி விட வேண்டும் என்பதே என் தொழில் என்று கூறிய பின்னரும்,

அதனைத் தொடர்ந்து, உம்முடைய தொழிலை எவ்வளவு காலத்திற்குச் செய்வீர்?. அன்றாடம் உம்முடைய வேலை நேரம் என்ன? என்று எதையாவது கேட்போமாயின், நாட்டுக்குத் தொண்டு செய்வதில் நேரம் காலம் ஏது? கடமையைச் செய்பவன் காலநேரம் பார்ப்பானா? சூரியன் ஓய்வு எடுத்துக் கொள்கிறதா? கோள்கள் விடுப்பு எடுக்கின்றனவா? இப்படி சிந்தித்து,  இன்னொரு வரியையும் சேர்த்துச் சொல்வான்.என்னுடைய தொழில் என்னவென்று கேட்டாய் அல்லவா? இதோ தெரிந்து கொள்.

“நமக்குத் தொழில் கவிதை.
நாட்டிற்குழைத்தல்.
இமைப்பொழுதும் சோராதிருத்தல்”

   நான் மேற்கொண்ட பணியைக் காலநேரம் கருதாமல், கண்ணிமைக்கும் நேரம் கூட சோர்ந்துவிடாமல், தொடர்ந்து செய்வேன். இந்த மண்ணில் விடுதலை மலரும் வரை, இந்தச் சமுதாயம் மேன்மை அடையும் வரை சோர்ந்துவிடமாட்டேன்  என்பதாகத் தன்னுடைய தொழிலைச் சொன்னார் பாரதி. மண் விடுதலையும் சமூக விடுதலையும் இரண்டு கண்களாகக் கொண்டவன்.

“நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம். இது
நமக்கே உரிமையாம் என்பதும் அறிவோம்.”

இது நம்முடைய நாடு என்பதை மட்டும் அறிந்து பயன் கிடையாது. இந்த நாடு நமக்கே உரியது. இந்தியத் திருநாட்டின்மீது உரிமை கொண்டாட, வேறு எவனுக்கும் தகுதி கிடையாது என்பதை நாம் உணர வேண்டும். அதை நாம் இன்னும் உணரவில்லை. அதை உணர்ந்தால் தான் விடுதலை உணர்வு தோன்றும். உரிமை தானே கடமையைச் செய்யத் தூண்டும்?. என்று நமக்கு அறிவுறுத்தியவன் பாரதி. என்னுடைய தாயை வேற்று நாட்டு தன்னுடையது என்று சொல்வதற்கு எவ்வளவு கோபம் வருகிறது?. இவள் நம்முடைய தாயடா. அவள் கட்டுண்டு கிடக்கிறாள். தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுக் கிடக்கிறாள். அவளுடைய இடர் தீர்ப்பது பிள்ளைகளாகிய நம் கடமை.

“இதம் தரும் மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம் திரு இரண்டும் நீங்கி பழி மிகுந்து இழுவுற்றாலும்
விதம் தரு கோடி இன்னல் விளைந்து என்னை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே”

நமக்குள்ளே ஆயிரம் வேறுபாடுகள் உண்டு.சாதியும் மதமும் நம் மேல் பூசப்பட்ட வண்ணங்கள் அதை வைத்து வேறுபாடு பார்ப்பது மிகப் பெரிய தவறு என்பதை மிக அழகாக பூனைக்குட்டிகள் மூலம், "வெள்ளை நிறத்தொரு பூனைபெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாம்."வெள்ளைப் பூனை பெற்ற பிள்ளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணம். வெண்மை நிறம் ஆனாலும் ஆனாலும் எல்லா குட்டிகளும் அத்தாய் பெற்றவை தானே. அதைப்போல நமக்குள் இனம் ,சாதி, சமயம் என வேற்றுமை பல இருந்தாலும், பிறப்பால் நாம் இந்தியர். "முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள். செப்புமொழி பதினெட்டுடையாள். எனில் சிந்தனை ஒன்றுடையாள்". என்பதை எடுத்து உணர்த்தியவன்.

“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?.” என்று எதார்த்தத்தை பாடிய பாரதி,வளர்ந்த சமுதாயத்தில்தான் சாதிப் பாகுபாடுகள் நிலவுகின்றன. இவை சிறு வயது முதலே உடனிருந்து வளர்ந்தவை. இளைய சமுதாயத்தில் அது தொடர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.அதனால்தான் குழந்தைகளைப் பார்த்து,” சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடினார்.”

“நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி. என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ. இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”. என்று அன்னை பராசக்தியை வேண்டியவர்.கூட்டம் பயன்பெறுமாறு செலவிடப்பட வேண்டும். சுடர்மிகும் அறிவுடன் என்னை படைத்து யாருக்கும் பெற்றவனாக மாற்றி நல்ல வீணயைச் செய்த நீ அதைப் முழுகிப் புரள விட்டுவிடுவாயோ?. ஆகையால் இந்த நாடு நலம் பெற உழைக்கும் வல்லமையை எனக்குக் கொடு.இந்த நல்ல வீணையை படைத்து புழுதியில் புரள விட்டுவிடாதே” என்றவர் கேட்கும் இடத்தில் அவருடைய தன்னம்பிக்கையும், சமுதாயத்தின் மீது அவர் கொண்ட ஆழமான மற்றும் வெளிப்படுகின்றன.
இப்போது இருக்கிற விதியை மாற்ற வேண்டும் இது சரியில்லை.இனிமேல் புதிய விதி ஒன்றை வகுக்க வேண்டும். அது எப்போதும் பின்பற்றத் தக்கதாக இருக்க வேண்டும். அந்த விதி சமுதாயத்தை ஏற்றத்தாழ்வற்றதாக மாற்றிக் காட்டவல்லதாக இருக்க வேண்டும். அதைக் காக்க வேண்டும் என்று சொன்னவன் பாரதி.

“இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.”

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு”
இதில் அனைவருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் படிக்க வேண்டும். சமுதாயம் வேறுபட்டால் அனைத்து தரப்பினருக்கும் தாழ்வு சமுதாயம் ஒன்றுபட்டால் அனைத்து தரப்பினருக்கும் உயர்வு.
உங்களுக்குள்ளே ஆயிரமாயிரம் சண்டைகள். இதற்கு மத்தியில் உங்களுக்கு ஏன் சுதந்திரம்? என்றும் வெள்ளைக்காரன் நம்மைக் கேட்பது போல் கோபம் மிகுந்த கேலியுடன் ஒரு பாட்டை எழுதினார்.

“தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா?….. ஒரு கேடா?”…. “ஜாதிச் சண்டை போச்சோ!! உங்கள் சமயச் சண்டை போச்சோ??.”.இப்படிச் சாதியும் சமயமும் வைத்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உங்கள் முன்னால் சுதந்திரத்தைக் கொண்டு வைத்தால் என்னடா செய்வீர்கள்??? குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் ஆகாதா?”என்று அன்று வெள்ளையன் நம்மை பார்த்துக் கேட்பதாக எழுதிய பாரதியின் வாக்கு எவ்வளவு தீர்க்கதரிசனம் உடையது?
சுதந்திரதேவி சுயநலப் புலிகளின் துணி துவைக்கிறாள் என்று இன்றையக் கவிஞர் பாடுகிறார்.

பாரதியின் பாட்டை பண்ணோடு ஒருவன் பாடினானடா. அந்தப் பாட்டில் கிறுகிறுத்துப் போனேனடா. அந்தக் கிறுக்கில் உளறுமொழி கேட்பாயடா.பாரதியின் உணர்ச்சிமிக்க பாட்டை இசையோடு ஒருவன் பாட கேட்டவன் அப்படியே கிறுகிறுத்துப் போவான். பாரதியின் சொல்லுக்கு அடிமையாகி போவான் என்பதை இப்படிக் கூறியிருக்கிறார்கள்.

 படித்தறியா மிக ஏழைக் கிழவன் ஆனாலும் பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாயின் தன் மெலிந்த தோளைக் கொட்டி, துளை மிகுந்த கந்தல் உடை சுருக்கிக்கட்டி எடுத்து எறிய வேண்டும் இந்த அடிமை வாழ்வை இப்பொழுதே இக்கணமே, என்று ஆரவாரம் செய்வானாம். செத்து கிடப்பவனுக்குக் கூட உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஆற்றல் பாரதியின் கவிதைக்கு உண்டு.
கவிதை என்பது உணர்ச்சி கூற்று. கவிஞன் உணர்ந்ததைப் படிப்பவரை உணரச் செய்யவேண்டும். அதில் பாரதி முழு வெற்றி கண்டவர். இன்று கவிதை எழுதுவோர் அறிந்துகொள்வதற்காக நிகழ்வு ஒன்றைக் கூறுகிறேன்.
 

அக்காலத்தில் மதுரையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது தான் மகாகவியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்னும் கவிதை. அன்றைக்கும் நடுவர்கள் சரியில்லையோ என்னவோ? அது ஒருபுறமிருக்க, இரண்டாமிடம் பெற்ற பாரதியின் பாடல் இன்றளவும் சாகாமல் அனைவர் வாயிலும் காதிலும் வந்து கொண்டும் விழுந்து கொண்டும் இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்பாடல் இருக்கும். 

நெஞ்சில் நிலைத்திருக்கும். என் கேள்வி என்னவெனில் பாரதியைதப் பின்னுக்குத்தள்ளி, அந்த முதல் பரிசு பெற்ற பாடல் யார் இயற்றியது? அந்தப் பாடல் எது? அப்பாடல் எங்குப் போனது? அறிந்தவர் சொல்லுங்கள். நீண்டநாள் தேடுதல்… கிடைக்கவில்லை.

பாரதியின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலை ஆராய்ந்து சொன்ன வெளிநாட்டோர், இக்கவிதையில் ஒரு சொல்லைக் கூட மாற்ற முடியாது. ஒரு சொல்லை மாற்றினாலும் கவிதையின் அழகு, ஆழம், உணர்ச்சி அத்தனையும் கெட்டுப் போய்விடும் என்று சொல்லி விட்டனர்.

1982-ம் ஆண்டு மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா…. அரசு, பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் எல்லாம் சிறப்பான நிகழ்வுகளை உள்ளடக்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடையம்.. செல்லம்மா பாரதி பிறந்த ஊர். பாரதி எங்க ஊர் மாப்பிள்ளை. கடையத்தில் பாரதி மன்றம் என்ற அமைப்பை ஏற்கனவே உருவாக்கி சிறப்பாக நடத்தி வந்தோம்.LMN என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர். அமரர் திரு.LM. நாராயணன் தலைவர். பாரதி மன்றத்தின் துணைச் செயலருள் நானும் ஒருவன். பாரதியின் நூற்றாண்டு விழா தான், என்னை ஒரு மேடைப் பேச்சாளனாக உயர்த்தியது என்று சொல்லலாம்.சிலம்புச் செல்வர் திரு மாபொசி தலைமையில் கடையத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் முத்தான விழா.
அதுவரை சத்திரம் தொடக்கப்பள்ளி, சத்திரம் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, எந்தெந்த பெயர்கள் மாற்றப்பட்டு சத்திரம் பாரதி தொடக்கப்பள்ளி, சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி, சத்திரம் பாரதி மகளிர் மேல்நிலைப்பள்ளி எனப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டன. நாங்கள் படித்தபோது சத்திரம் உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அந்த ஆண்டு முதல் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியாக பெயர் மாற்றம் பெற்றது.
பாரதியின் பெயரில் சமுதாயக் கூடம் ஒன்று கட்டப்பட்டது. அரசாங்கத்தால். பாரதி நூல் நிலையம் அமைக்கப்பட்டது. பாரதியின் பெயரில் காணி நிலம் என்று ஓரிடம் ஒதுக்கப்பட்டது அன்றைய தமிழக அரசால். இன்றைய தமிழக அரசு கடையத்தில் மகாகவி பாரதிக்குச் சிலை ஒன்றை அமைப்பதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வேண்டுகோள் அன்றைக்கே விடுக்கப்பட்டது.
இப்போது மணி மண்டபம் கட்டுவதற்காகப் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அறிந்து மகிழ்கிறோம்.

பாரதி நூற்றாண்டு விழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் எங்கள் ஊருக்கு, அன்றைய தொலைக்காட்சி ஊடகங்கள், செய்தித்தாள் ஊடகங்கள், அரசுச் செய்தி மற்றும் விளம்பரத்துறை என ஒவ்வொரு நாளும் கடையத்திற்கு வந்துவிடுவர். நாங்கள் சேர்ந்து அலைவோம். செல்லம்மாவின் உடன்பிறந்த தங்கை சொர்ணாம்பாள் கடையத்தில் வாழ்ந்து வந்தார். அனைத்து ஊடகங்களும் அவரிடம் பேட்டிக்காகக் காத்திருப்பர். அவரும் பாரதியைப் பற்றி பலரும் அறியாத செய்திகள் பலவற்றைச் சுவைபடக் கூறுவார்.நாங்களும் அப்போது உடனிருப்போம். இன்றளவும் அவற்றையெல்லாம் மறக்க முடியாது.

சமூக விடுதலையில் மிகப்பெரும் பங்கு, பெண் விடுதலைக்கு உண்டு என்பதை வலியுறுத்தியவன் பாரதி.

“எட்டும் அறிவியில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்” என்று கும்மியடித்தவன்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமமையைக் கொளுத்த ஆசைப்பட்டவன்.தான் கண்ட கற்பனைச் சுதந்திரப் பூமியில் ஆண்களோடு பெண்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழக் கண்டான்.

“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே”

ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்ல வந்த பாரதி ஒரு சொல்லோடு திருப்தி அடையவில்லை. முதலில் ஆணும் பெண்ணும் சரி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தினான். அப்போது அவனுக்குத் திருப்தி இல்லை. மேலும் ஒரு சொல்லை சேர்த்தான் நிகர் என்று. இப்போதும் முழு திருப்தி இல்லாமல் சமானம் என்ற சொல்லையும் உடனே இணைத்தான். ஒரு பொருளை உணர்த்த மூன்று சொற்கள். இப்போது பாடல் வரியை நன்றாகப் பாருங்கள்..

சரி, நிகர் ,சமானம்.. என்ற மூன்று சொற்களும் இடம்பெற்றிருக்கும் பாங்கு ஆணுக்குப் பெண் சமம் என்பதை, எவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தவரை விந்தைமனிதர் என்று பெயர் சூட்டி அவனைத் தலைகுனிய வைத்தவன் பாரதி.

“காக்கை குருவி எங்கள் ஜாதி.நீள் காடும் மலையும் எங்கள் கூட்டம்”. இதைவிடச் சிறப்பாகச் சமத்துவ சமுதாயத்தை எவரால் கூறிவிட முடியும்?நாயையும் நரியையும் தோழர்களாக ஏற்றுக் கொண்டவன் அவன்.

பார்க்கும் பொருள்கள் அனைத்திலும் கடவுளைக் கண்டவன் பாரதி. கடவுளைக் காண்பதில் மனப்பக்குவம் அவசியம். தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்று கண்ணதாசன் பின்னாளில் எழுதுவதற்கு முன்பு கல்லிலும் மண்ணிலும், கடவுளைக் காணலாம். பார்க்கும் பக்குவம் தெரிந்தால் மனிதக் கழிவை கூடக் கடவுளாகக் காணலாம் என்று சொன்னவன் பாரதி.

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதயே நந்தலாலா”

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா”

ஜன்னலைத் திறந்து வை. காற்று வரட்டும் கதவைத்திற. அத்தனைக்கும் ஆசைப்படு என்றெல்லாம்…. இன்று சொல்வோர்க்கு அடி எடுத்துக் கொடுத்தவன் பாரதி. பேராசை பெருநஷ்டம் என்று சொல்லிப் பின்பற்றி வந்த நமக்கு பாரதி சொன்னான் “பெரிதினும் பெரிது கேள்”அளவறிந்து உண்க, மீதூண் விரும்பேல்.. என்று பழகி வந்த நமக்கு,”ஊண்மிக விரும்பு”என்று சொல்லித் தந்தவன் பாரதி. வயிறு நிறையாத அவனுக்கு தானே உணவின் அருமை தெரியும்.

  அச்சம் தவிர்' ஆண்மை தவறேல்' இளைத்தல் இகழ்ச்சி' ஈகைத் திறன்' நையப் புடை, ரௌத்திரம் பழகு' நேர்படப் பேசு, புதியன விரும்பு, ஔடதம் குறை, ஞமலிபோல் வாழேல், உடலினை உறுதி செய், சீறுவோர் சீறு, சோதிடம் தனை இகழ், தையலை உயர்வு செய், வெடிப்புறப் பேசு, வேதம் புதியது செய், வையத் தலைமை கொள் என்பவற்றையெல்லாம் புதிய தத்துவங்களாக வழங்கினான் பாரதி.

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று கற்பித்து வந்த உலகிற்குப் "பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா." என்ற புதிய பாடம் கற்பித்தவன் பாரதி.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அவர் தந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே ,அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றிச் சிறந்ததும் இந்நாடே. பாரதத் திருநாடு நமக்கே உரிய நாடு ஏனெனில் என் தந்தை வழி தாயின் வழி பரம்பரை உரிமை எமக்கு இருக்கிறது என்பதை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக மேற்கண்ட பாடலில் சொல்லியிருக்கிறான்.
பாட்டன் பாட்டி காலத்திலேயே புதிய சிந்தனைகளை உருவாக்கிய நாடு எங்கள் நாடு. என்றும் அழியாத உண்மைகளையும் தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்ன நாடு. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இன்பமாக இருந்தது என் நாடு அதன் பயனாக நாம் பிறந்தோம் இனியும் இந்நாட்டை யாருக்கும் விட்டுத் தரக்கூடாது.என் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் வேண்டுமல்லவா?
தாய்நாடு தாய்நாடு என்று சொல்லி வந்தவர் மத்தியிலே, முதன் முதலாக தந்தை நாடு என்று சொன்னவன் பாரதி.ஏன் தந்தை நாடு என்று சொன்னான்?, என்பதைச் சற்று சிந்தித்தால், தாய்வழிச் சொத்துக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது .ஆனால் தந்தைவழி சொத்து தானாகவே பிள்ளைகளுக்குபோய்ச் சேரும்.எனவே இது என் அப்பன் நாடு, என் பாட்டன் நாடு, எனக்குத்தான் உரிமை என்பதை ஆணித்தரமாகச் சொல்ல வந்த பாரதி,

“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே”. என்று சொல்லி மேற்கண்ட கருத்தை உணர்த்தினான்.

ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி அலையும் மனிதரை அறிவிலி என்று அழைத்து’அறிவு ஒன்றே தெய்வம் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று தம் கடவுள் கொள்கையை வெளியிடுகிறான் பாரதி.

கடையம் தட்டப்பாறை

கடையம் சென்றால், இப்போதும் தவறாமல்’ தட்டப்பாறை’ என்னுமிடத்தைச் சற்று வியப்போடு பார்த்து விட்டு வருவது வழக்கம். தட்டப்பாறை என்பது, ஊருக்கு வெளியே ஆற்றங்கரையில் அமைந்த குன்று ஒன்றின் தட்டையான பகுதி. தட்டையாக இருப்பதால் தட்டப்பாறை. வியப்பின் ஒரு காரணம் மகாகவி அந்த பாறை மீது அமர்ந்து கொண்டு தன்னந்தனிமையில் கவிதை இயற்றுவார் என்பதுதான்.
அமரகவி பாரதியின் பல்வேறு அழியாக்கவிதைகள் அந்த இடத்தில் தோன்றின. மற்றொரு காரணம் சாதாரணமாக யாருமே அப்பகுதிக்குச் செல்ல மாட்டார்கள். காரணம் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் இடம் தட்டப்பாறை. ஆம் அது சுடுகாடு. சுடுகாட்டில் அமர்ந்து கொண்டுதான் சாகாவரம் பெற்ற பாட்டுகள் பலவற்றை எழுதி இருக்கிறார் பாரதி.
கோவிலில் அமர்ந்து கவிதை எழுதக்கூடாது என்று விரட்டப்பட்டதால், சுடுகாட்டில் அமர்ந்தது பாட்டு எழுதியதாக அறிய வருகிறோம்.
கடையம் ஊருக்கு இன்னும் மேற்குப்பகுதியில் காட்டிற்குள் அமைந்துள்ள மேலப்பத்திரகாளி அம்மன் கோவிலின், உயர்ந்த பாறை மேலும் அமர்ந்தவாறு, படுத்தவாறு நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியவர் பாரதி.

கடையத்தின் அருகிலுள்ள இஸ்லாமியர் புனிதத்தலம் நாகூர் ஆண்டவர் சன்னதி பொட்டல்புதூர். இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் இடம்.அங்கு அடிக்கடி பாரதி செல்வார். எல்லோரும் உண்டியலில் பணத்தைக் காணிக்கையாக போட்டபோது, அல்லாவைப் பற்றிப் பாட்டு ஒன்றை எழுதித் தன்னுடைய காணிக்கையாக உண்டியலில் போட்டார் மகாகவி.

வில்லுப்பாட்டு

கடையத்தில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா தை மாதம் 8 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடையத்தில் பாரதி இருக்கும்போதெல்லாம்,விழா நாட்களில்மட்டுமில்லாமல் பல நாட்கள் பத்ரகாளியம்மன் கோவில் வாசலில் வந்து அமர்ந்து இருப்பார். விழாவில் வில்லுப்பாட்டு நடைபெறும் போது இவரும் சேர்ந்து பாடி இருக்கிறார்.கோவிலில் சாமி ஆட்டம் நடைபெறும் போது இவரும் சேர்ந்து சாமி ஆடியிருக்கிறார். அந்தப் பகுதி மக்களும் அவருக்கு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்று அறிய வரும்போது,இவையெல்லாம் வியப்பூட்டும் செய்திகளாக இருக்கும்.

பாரதி உலாவிய கடையம் மண்ணில் தட்டப்பாறை , பச்சைப் பசேலென்ற வயல் பகுதிகள், ஆற்றங்கரை குளக்கரை என எல்லாவற்றையும், பாரதி என்ற திரைப்படத்தில் இயக்குனர் ஞான ராஜசேகரன் படம் பிடித்து காட்டி இருப்பார். நிற்பதுவே நடப்பதுவே என்னும் பாடல் முழுவதும் அங்கு தான் படமாக்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் எஸ்.வி சுப்பையா பாரதி வேடம் ஏற்று நடித்தார். ஆனால் சிவாஜிகணேசன், தான்ஏற்று நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கதாபாத்திரங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று பாரதி. கை கொடுத்த தெய்வம் என்னும் திரைப்படத்தில் சிந்து நதியின்மிசை என்ற பாடலுக்கு மட்டும் பாரதியின் வேடம் ஏற்று நடித்தார். கடைசியில் சாயாஜி ஷிண்டே அந்த வாய்ப்பினைப் பெற்றார்.

வறுமையை மறைத்துக்கொள்ளத் தானே வாழ்நாள் முழுவதும் கோட்டும் சூட்டும் அணிந்துகொண்டார் பாரதி. முகச்சவரம் செய்வதற்கும் வசதி இல்லாமல் தாடி மீசையை வைத்துக் கொண்டார். தலைமுடியை வெட்டிக் கொள்ள வசதி இல்லாமல் முண்டாசு அணிந்துகொண்டார்.வாழ்நாள் முழுவதும் வறுமையை வெல்ல முடியவில்லை. வறுமைதான் மகாகவியை வென்றுவிட்டது. பாரதி ஏன் நாற்பது வயதை எட்டிப் பிடிக்கவில்லை? என்று கேட்டால், அவர்,தம் மீசை முடியில் கூட வெள்ளையனை விரும்பவில்லை என்று கவித்துவமாக பேசும் இந்தச் சமுதாயம் தான் அவரை அன்று பட்டினியாகப் போட்டது. கழுதைக் குட்டியைத் தூக்கி முத்தம் கொடுத்துவிட்டு எல்லாக் கடவுளின் அனுக்கிரகமும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அனைவரும் பாரபட்சம் உள்ளவர்கள். மூதேவி ஒருத்திதான் தன்னுடைய அருளாகிய தரித்திரம் என்பதை பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் எப்போதும் வழங்குவாள். எனவே அவனுடைய வாகனமாகிய கழுதைக்கு முத்தமிடுகிறேன் என்று கூறினாராம்.

மைத்துனி

1897 ஆம் ஆண்டு கடையம் செல்லப்பா ஐயரின் மகளான செல்லம்மாவுடன் பாரதிக்குத் திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றார். வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களில் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு, பாண்டிச்சேரியிலிருந்து மனைவி மக்களோடு கடையம் வந்து, தன்னுடைய மைத்துனியைக் கைம்மைக் கோலத்தில் கண்டு வருந்தினார்.” சிறுவயதிலேயே இவளுக்கு இந்த நிலைமையா? திருமணத்திற்கு முன்பு அந்தப் பையன் தீராத நோயாளியாமே?” என்று கோபித்தார். மைத்துனியை அக்கோலத்தில் பார்த்த அன்றே ஒரு பாடலை எழுதினார்.

“மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன். வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை…. பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளி முகம்….”பின்னாளில் இப்பாடல் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றது.

பிற்காலத்தில் அரசு உதவிப் பணம் பெறுவதில்லை சொர்ணம்மாள் மிகுந்த இடர் பட்டார். அத்தொகையைப் பெறுவதற்கு முதலமைச்சரை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. “நான் மகாகவி பாரதியின் மைத்துனி. யார் காலிலும் விழ மாட்டேன். உதவிக்காக யாரையும் போய்ப் பார்க்க மாட்டேன்” என்று சொர்ணம்மாள் சொன்னதாக அறிகிறோம்.பிறகு அன்றைய முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் தானே முன்வந்து உதவித்தொகையைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்த நிலையில் அந்தப் பணம் வந்து சேர்வதற்குள் சொர்ணம்மாள் மறைந்துவிட்டார்.

சுயமரியாதை கொள்கையைக் கடைப்பிடித்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தன் வாழ்நாள் முழுவதும் யாரையும் வணங்கியதில்லை. ஒருநாள் அவர்,செல்லம்மா பாரதியின் கால்களில் விழுந்து வணங்கினாராம். “என் குருநாதர் ரோடு வாழ்க்கை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை நான் அறிவேன். எத்தகு பொறுமை இருந்தால், இவர்களுக்கு அது சாத்தியம் ஆயிருக்கும்!!” என்று கூறினாராம். பொறுமையும் அடக்கமும் அன்பும் விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் ஆகிய நற்குணங்கள் உள்ள தாயின் கால்களில் விழுவது மரியாதைக் குறைவன்று என்பது பாரதிதாசனின் கருத்து. அத்தகு பொறுமையின் திருவுருவமாகிய செல்லம்மா பிறந்த ஊர் கடையம் எங்கள் ஊர் என்பதில் பெருமை.

பாரதி என்ற திரைப்படம் தவிர ஏராளமான திரைப்படங்கள் கடையம் பகுதியில் எடுக்கப்பட்டவை. நடிகர் திலகம் நடித்த பழைய படம் பழனி(இப்படத்தில் வட்ட வட்டப் பாறையிலே என்ற பாடலில் காட்டப்படும் குலமும் பாறைப் பகுதியில் எங்கள் ஊர்) பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து. பாண்டியராஜனின் வள்ளி வரப்போறா, இன்னும் ஏராளமான திரைப்படங்கள். மலையாள படங்கள் கூட ஏராளமாக இங்குப் படமாக்கப்பட்டன. நான் பள்ளியில் படித்த காலத்தில் சாவித்திரி என்ற மலையாள படம் ஒன்று இயக்குனர் பரதன் (தேவர்மகன் பட இயக்குனர்) எங்கள் ஊரில் எடுத்தார். மனோரமா நடித்த ஒரு படமும் எங்கள் ஊரில் படமாக்கப்பட்டது.

கடையத்தில் பாரதி வாழ்ந்த இல்லம் பழைய கிராமத்தில் (அக்ரஹாரம்) உள்ளது. அதை பார்க்கும் போது மனதிற்குள் அந்த முண்டாசுக் கவிஞனின் கால்கள் பட்ட இடம் அல்லவா நம்மூர்? இந்த ஊரில் பிறப்பதற்கு எத்தனைப் பிறவிகள் எத்தனைத் தவங்கள் நாம் செய்தோமோ? என்று எண்ணிக் கொள்வேன். மேற்சொன்ன எல்லா நிகழ்வுகளிலும் என்னுடைய நண்பன் பாலனும் உடன் இருந்தது,இன்றும் நாங்கள் இருவரும் தொலைபேசி வழியாக மலரும் நினைவுகளாய் அவற்றை அசைபோடுவது.. எல்லாம் ஒரு மகிழ்ச்சி.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்றால், பாரதியின் கால்பட்ட கடையம் மண் காவியமே பாடும்,என்று ஒரு கவியரங்கில் முன்னுரையாக நான் சொன்னேன்…
சிவகாசி.முத்துமணி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.