பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்
1 min read
Farooq Abdullah’s assets worth Rs 12 crore frozen
20/12/2020
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.
பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது
. அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா.
அப்போது கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ.43.69 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பரூக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முடக்கம்
இது தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனை அடுத்து பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்கள் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் உள்ளன. 2 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு வணிக கட்டிடம், 3 மனைகள் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஆகும்.
இந்த சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு ரூ.11.86 கோடி என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ..60 கோடி முதல் ரூ.70 கோடி வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பரூக் அப்துல்லா மகனான, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பரம்பரை சொத்து என்று அவர் டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.