தமிழகத்தில் 10-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும்
1 min readThe northeast monsoon will continue till the 10th in Tamil Nadu
31.12.2020
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மழை
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
1ந் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
2ந் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
3, 4 ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
10-ந் தேதி வரை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.