இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பரிந்துரை
1 min read
Recommendation to introduce 3 corona vaccine in India
1&1&2021
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கொரோன தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டன. இதில் சில நாடுகள் தடுப்பூசியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. அமெரிக்க நிறுவனங்களான பைசர், மாடர்னா ஆகியவற்றின் தடுப்பூசிகள், ரஷியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, சீனாவில் 2 தடுப்பூசிகள் ஆகியவை ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் தனியாக தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருந்தது. அதன் சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில்…
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் ’கோவிஷீல்டு’ பெயரில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் இந்த தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்றதையடுத்து தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.
அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் மத்திய அரசிடன் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும், பைசர் நிறுவன தடுப்பூசியையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் விண்ணப்பிக்கப்பட்டது.
பரிந்துரை
இதையடுத்து, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு இன்று(வெள்ளிக்கிழமை) கூடி கொரோனா தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் தடுப்பூசியின் செயல்பாடு தரவுகள் தொடர்பான தகவல்கள் நிபுணர் குழுவிடன் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த தரவுகளின் அடிப்படையில், இந்த நிபுணர் குழு ஆலோசனை நடத்தி தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்படும்.
இந்த நிலையில், நிபுணர் குழு இன்று நடத்தி வரும் ஆலோசனையில் சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனத்தின் ’கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை அவசர கால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி அளிக்கும் படி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 மணி நேர ஆலோசனைக்கு பின்னர் சீரம் நிறுவன ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை போலவே கோவாக்சின், மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிபுணர் குழு பரிந்துரை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.