நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு
1 min readWater level of Nellai and Tenkasi district dams
1&1&2021
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
மழை
தமிழகத்தில் இந்த ஆண்டு 2 புயலால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. ஆனால் புயல் ஓய்ந்தபின்னர் ஓரளவு மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. சில நேரம் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.
அணைகளின் நீர் மட்டம்
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்காரணமாக நிர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் நேற்று (வியாழன்கிழமை) 140 அடியாக இருந்தது. இரவு முழுவதும் நீடித்த மழையால் நீர்மட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 142.50 அடியாக உயர்ந்தது. இதனால் அணை தனது முழு கொள்ளவை எட்டியது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 145 அடியானது. அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,263.77 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காகவும், உபரியாகவும் வினாடிக்கு 2, 405 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மழை காரணமாக 112 அடியை எட்டியது. அணை நிரம்ப 6 அடி நீரே தேவை. அணைக்கு தற்போது 2,618 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 480 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையில் 28 அடி, கொடுமுடியாறில் 25 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.