May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தொடர் மழையால் மணிமுத்தாறு அணை நிரம்புகிறது

1 min read

Manimuttaru dam fills with continuous rain

5.1.2021

தொடர்ந்த பெய்த மழையால் மணிமுத்தாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

வடகிழக்கு பருவமழை நீடித்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீண்டும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மணி முத்தாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மலைப்பகுதியிலும் மழை நன்றாக பெய்தது.

பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி நகர் பகுதியிலும் மழை நன்றாக பெய்தது. மற்ற பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 11 அணைகள் உள்ளது. இதில் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணை மட்டும் இதுவரை நிரம்பாமல் இருந்தது.

நிரம்பி வருகிறது

தற்போது மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 20 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 455 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

இதனால் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று(திங்கட்கிழமை) 113 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை மேலும் ஒரு அடி உயர்ந்து 114.35 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 118 அடியாகும். இன்று பிற்பகல் இது 115 அடியானது. அணை நிரம்ப மேலும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவை. அணை பாதுகாப்பு கருதி 117 அடி வரையே தண்ணீரை தேக்குவார்கள். இதனால் மேலும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்தாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை அதிக அளவில் திறந்து விடுவார்கள்.
இதுபோல மேலும் 2 நாட்கள் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வந்தால் அணை முழுவதும் நிரம்பி விடும்.

பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவையொட்டி நிறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 142.55 அடியிலேயே தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது.

குற்றாலம் அருவிகள்

குற்றால அருவிகளில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று ஓரளவு தண்ணீர் குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-

மணிமுத்தாறு-34, பாபநாசம்-32, கடனாநதி-25, சேர்வலாறு-21, அம்பை-21, கன்னடியன் கால்வாய்-18.4, பாளை-12, சேரன் மகாதேவி-12, ராமநதி-5, களக்காடு-3.6, சிவகிரி-3, கருப்பாநதி-1, குண்டாறு-1

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருச்செந்தூர்- 16, குலசேகரன்பட்டினம் -8, ஸ்ரீவைகுண்டம் -4, கடம்பூர்-3, தூத்துக்குடி -1, ஓட்டப்பிடாரம்-1, சாத்தான்குளம்-1, விளாத்திகுளம்-1

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.