April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

40 வயதில் நாயகிகள் போன்று வலம்வர வேண்டுமா? பெண்களுக்கு டிப்ஸ்

1 min read

நடிகை வித்யா பாலன்

பெண்களே 40 வயதில் நாயகிகள் போன்று வலம்வர வேண்டுமா?

Want to thrive like heroines at 40? Tips for women

‘உங்களை பார்த்தால் நாற்பது வயது என்று சொல்லவே முடியாது. இருபத்தைந்து வயதே ஆகியிருப்பது போன்று உங்களிடம் இளமைத் துள்ளுகிறது’ என்று நீங்கள் சந்திக்கும் பெண்ணிடம் சொன்னால், அந்த பெண் தன்னை 40 வயது சினிமா கதாநாயகிபோல் நினைத்துக்கொண்டு அந்தரத்தில் சிறகடித்து பறப்பார். உங்கள் இருவருக்கும் இடையேயான சந்திப்பு மிக இனிமையானதாக அமைந்துவிடும். அதே பெண்ணிடம், ‘உங்களுக்கு நாற்பது வயதுதான் ஆகியிருக்கிறதா? பார்த்தால் ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கும்படி இருக்கிறீர்களே..’ என்று சொல்லிவிட்டால், அப்படியே தலைகவிழ்ந்தபடி சோர்ந்துபோய் உங்களை கடந்துசென்றுவிடுவார்.

எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.

பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான் கவலைப்படுகிறார்கள். நாற்பது வயதில் புறஅழகை மட்டும் மேம்படுத்திவிட்டால் நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம் வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் மிக முக்கியம். நாற்பது வயதை கடக்கும்போது உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளரத் தொடங்கிவிடும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே பெண்கள் மனதில்கொள்ளவேண்டும். அப்போதே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நல பிரச்சினை எதுவும் தோன்றாது.

இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை கேளுங்கள்..

“நாற்பது வயது பருவம் என்பது பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை உண்ணவேண்டும். நாற்பது வயதுகளில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அது ஏற்படாமல் இருக்க வறுத்த, பொரித்த உணவுகள் உண்பதை வெகுவாக குறைத்திடுவது நல்லது. அதாவது 30 வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.

மதிய உணவில் சாதத்தின் அளவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்கவேண்டும். புடலை, பூசணி, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய தேவைப்படும். அதனால் அந்தந்த சீசனில் கிடைக்கும் இரண்டு வகை பழங்களையாவது அன்றாடம் உட்கொள்வது அவசியம். தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்க்கும் பழக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்” என்றார்.

நாற்பது வயதில் நாயகிகளாக வலம்வர கட்டுடலும் மிக அவசியம். அதற்கு முறையான உடற்பயிற்சி தேவை. அது பற்றி உடற்பயிற்சி நிபுணர் சொல்கிறார்…

“உடல் எடையை கட்டுக்குள்வைத்தபடி எப்போதும் புத்துணர்ச்சியோடு வலம்வர வேண்டும் என்றால், உடற்பயிற்சி அவசியம். ஆனால் இதில் இருக்கும் சில உண்மைகளை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உடற்பயிற்சியை தாங்களாகவே வீடுகளில் தொடங்குகிறவர்கள் புத்தகத்தை படித்தோ, டி.வி.யை பார்த்தோ பயிற்சியை ஆரம்பித்துவிடக்கூடாது. ஏன்என்றால் அனைவருக்கும் அனைத்துவிதமான பயிற்சிகளும் பொருந்தாது.

ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகு மற்றும் உடல்நிலைக்கு தகுந்தபடி அவர்களுக்கான உடற்பயிற்சியையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை கண்டறிய, உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும். அத்தகைய ஆலோசனையை பெற வாய்ப்பில்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள்பட்டை, புஜம், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.

நாற்பது வயதில் நாயகிகளாக வலம் வர மனதும் உற்சாக மாக இயங்கவேண்டும். “மனதே சரியில்லை என்ற வார்த்தையை நாற்பது வயதுகளில் இருக்கும் பெண்கள் உச்சரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதில் இருந்து விடுபட்டு, தன்னை உற்சாகமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பெண்கள் என்றாலே எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையே நினைத்து வருந்தக்கூடாது. பொருளாதார நெருக்கடி, குடும்ப நெருக்கடி போன்றவைகள் இருந்தாலும் அதை நினைத்து மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களை குறை சொல்வதை தவிர்ப்பதும், எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல் இருப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்” என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.