July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அரசு அளித்த அனுமதி ரத்து

1 min read

Cancellation of government permission for 100 per cent seats in theaters

8&1&2021

சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து, கூடுதல் காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

சினிமா தியேட்டர்

சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல என கூறியது.

இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பலாம் என்ற முந்தைய உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. அதாவது தமிழக அரசு அளித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கபடுகிறது என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நோய் தொற்று

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரெயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், திரைப்படப் படப்பிடிப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.