தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் 19-ந் தேதி பள்ளிக்கூடம் திறப்பு
1 min read
In Tamil Nadu, the school will open on the 19th only for 10th and 12th classes
12.1.2021
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடம் மூடல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் தற்போது ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது சாதாரண கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் வேகமாக குறைந்து வந்ததால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதனால் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிக்கூடங்களை திறக்க அரசு முடிவு செய்தது.
ஆனால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஒரு சில பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் பெற்றோர், மாணவர்களுடன் 2-வது முறையாக கருத்து கேட்கும் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
19ந் தேதி திறப்பு
இதில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வருகிற 19ந் தேதி பள்ளிக்கூடங்களை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&-
குறைந்து வருகிறது
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ் நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8-ந்தேதி வரை கருத்து கோரப்பட்டது.
இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
வைட்டமின் மாத்திரை
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.