புதிய பாராளுமன்ற கட்டிடப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும்
1 min readConstruction of the new parliament building will be completed next year
16.1.2021
புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. அந்தப் பணி அடுத்து ஆண்டு நிறைவு பெறுனம் என்ற கூறப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடம்
டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் ஆகி விட்டன. மக்களவை, மாநிலங்களவை கூட்டம் சேர்ந்து கூடும்போது இந்த கட்டிடம் போதுமானதா இல்லை.
எனவே புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆளும் பாரதீய ஜனதா கட்சி முடிவு எடுத்தது. மொத்தம் ரூ.971 கோடியில் பிரமாண்டமான முறையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம், முக்கோண வடிவத்தில் பிரமாண்டமாக அமைகிறது. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர்வதற்கு ஏற்ற வகையில் கட்டப்படுகிறது. மக்களவையில் கூட்டு கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப 1,272 இருக்கைகள் வரை போடும் வசதி இருக்கும்.
இதனை கட்டும் பொறுப்பை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வழக்கு
இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி கொடுத்தது.
அனால், கட்டிடத்தின் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாக பாரம்பரிய குழு உள்ளிட்ட பிற தொடர்புடைய அதிகாரிகளின் முன் அனுமதியை பெறுமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதைத் தொடர்ந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்த பாராளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டா என்னும் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான தனது ஒப்புதலை 14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரிய குழு, இந்த வார தொடக்கத்தில் அளித்தது. இந்த குழு, மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்துக்கும் அனுமதி கொடுத்துவிட்டது.
அடுத்த ஆண்டு…
அதைத் தொடர்ந்து புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி வெற்றிகரமாக நேற்று தொடங்கி விட்டது. இந்த பணி அடுத்த ஆண்டு நிறைவு பெறும்.
அடுத்த ஆண்டு, நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறபோது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு எண்ணி இருப்பது குறிப்பிடத்தக்கது.