காரைக்கால் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்ட மறந்த காங்கிரஸ் அரசு
1 min readThe Congress government forgot to name Karunanidhi for the Karaikal bypass
5.2.2021
காரைக்கால் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்ட மறந்ததால் முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புறவழிச்சாலை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழிச்சாலை என்று பெயர் சூட்டுவது என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்று பயணமாக காரைக்காலுக்கு சென்றார். காரைக்கால் மாவட்டத்தில் அவர் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். இதில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் மேற்கு புறவழிசாலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்று புறவழி சாலையை திறந்து வைத்தார்.
ஆனால் அந்த சாலையில் டாக்டர் கலைஞர் புறவழிச்சாலை என்று எழுதப்படவில்லை. மாறாக மேற்கு புறவழிச்சாலை என்றே எழுதப்பட்டது.
அரசியல் குழப்பம்
புதுவையில் தற்போது காங்கிரஸ்&தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடப்போவதாக கூறிவருகிறது. ஜெகத்ரட்சகனை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் காரைக்கால்
புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது.
வாக்குவாதம்
இந்த நிலையில் புறவழிச்சாலை திறப்பு விழாவில் காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள் மேடையில் இருந்த முதல்- அமைச்சர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என கேள்வி எழுப்பினர்.
திறப்பு விழா அழைப்பிதழில் கூட மேற்கு புறவழி சாலை என்று மட்டும் தான் இடம்பெற்றுள்ளது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் சாலைக்கு அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கூட கலைஞர் பெயர் இடம் பெறவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
உத்தரவு
இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களை சமாதானம் செய்தார். காரைக்கால் மாவட்ட கலெக்டரை (பொறுப்பு) அழைத்து 2 நாட்களுக்குள் சாலையின் பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் மேற்கு புறவழிசாலை என்ற பெயரை எழுதும்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து வெளியேறினர்.