சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளால் இலங்கையில் 200 விபத்துகள்
1 min read200 accidents in Sri Lanka due to train sets made in China
5.2.2021
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளால் இலங்கையில் 200 விபத்துகள் ஏற்பட்டுள்ளதால் அந்தப் ரெயில் பெட்டிகளை கொண்ட ரெயிலை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை ரெயில் டிரைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சீன ரெயில் பெட்டிகள்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இலங்கைளை தன் வசம் ஆக்கி கொண்டால் இந்தியாவையும் எச்சரிக்கலாம் என்று சீனா நினைக்கிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை அங்கு மேற்கொண்டு வருகிறது.
பொதுவாகவே சீன பொருட்கள் தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அனுப்பிய ரெயில்பெட்டிகள் அனைத்தும் தரம் குறைந்தவை என்றும் சரியாக இயங்கவில்லை என்றும் ரெயில் என்ஜின் டிரைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இலங்கையின் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட சமீபத்தில் நிருபர்களுக்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புறக்கணிக்க முடிவு
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்படவேண்டும்.
சீனாவில் தயாரிக்கப்படும் ரெயில் வண்டிகள் குறித்து எழுப்பப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரெயில் வண்டிகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
200 விபத்துகள்
இலங்கையில் குறைபாடுகள் கொண்ட சீன ரெயில் பெட்டிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ரெயில்வே பொறியியல் துறைக்கு போக்குவரத்து துறை மந்திரி கடந்த செப்டம்பர் மாதம் அறிவுறுத்தி இருந்தார்.
சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறு காரணமாக சமீபத்திய காலங்களில் கிட்டத்தட்ட 200 விபத்துக்கள் பதிவாகி உள்ளதாக என்ஜின் டிரைவர்கள் சங்கம் கூறி உள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்களும் இலங்கையில் உள்ளன. ஆனால் அவைகள் பற்றி எந்தக் குறைகளையும் இலங்கையில் சொல்லவில்லை.