தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
1 min readDMK Cancellation of education loans if coming to power; MK Stalin’s promise
12.2.2021
திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 3-வது கட்ட பிரசாரத்தை இன்று( வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் தொடங்கினார். விழுப்புரம் அருகே உள்ள காணைகுப்பம் என்ற இடத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏராளமான மக்கள் பங்கேற்று மனுக்களை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர்.
மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் பொதுமக்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்விக் கடன்
நாங்கள் சொல்வதை ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஒப்புகை சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம். ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், மக்களின் அன்றாட பிரச்சினைகளை தமிழக அரசு தீர்த்து வைத்திருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.