May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி

1 min read

Work for 13 transgender people at Puthuvannarapettai Metro Rail Station

15.2.2021

புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மெட்ரோ ரெயில்

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார்.

இந்த மெட்ரோ ரெயில் சேவையால் வட சென்னையில் போக்கு வரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளனர்.

பேட்டி

புதுவண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது மற்றும் பயணிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லும் பணியில் திருநங்கை வினித்ரா தேவி(வயது 30) நியமிக்கப்பட்டு உள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர் தனது பணி குறித்து பெருமையாக கூறியதாவது:-

பல வருடங்களாக துன்பங்களை தாங்கிய பின்னர் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். இருளில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஒருவருக்கு இது நம்பிக்கையின் ஒளியாக உணர்கிறோம். இதனை பற்றிக் கொண்டு பெருமையுடன் முன்னேறுவோம்.

பவானி, கனிமொழி, பார்கவி ஆகியோர் கூறும் போது, “பொதுமக்கள் எப்போதும் எங்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இப்போது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இந்த வேலையை செய்ய பெரிதும் எதிர்பார்க்கிறோம். பொதுமக்களுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ளதால் முழு திருப்தியுடன் உள்ளோம். எங்களை வேலைக்கு அமர்த்திய சென்னை மெட்ரோ ரெயில் நிலைய நிர்வாகத்தினருக்கு நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்.” என்றனர்.

என்ஜினீயரிங் பட்டதாரி

என்ஜினீயரிங் பட்டதாரியா அருண்கார்த்திக் கூறும்போது, -”நான் பகுதி நேர வேலைகளை செய்து பல ஆண்டுகளாக போராடினேன். தனியாக உயிர் வாழ்வது முதல் எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து போராடி இருக்கிறேன். இந்த பணியில் சேர்ந்ததால் நான் சாதித்து இருக்கிறேன். இனி எங்களுக்கு எதிராக யாரும் பாகுபாடு காட்டமாட்டார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.