பஸ்கள் அதிகம் ஓடாததால் மின்சார ரெயில்கள் கூட்டம் அதிகரிப்பு
1 min readCrowds of electric trains increase as buses do not run much
25.2.2021
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் அதிகம் ஓடவில்லை. இதனால் சென்னையில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
வேலை நிறுத்தப் போராட்டம்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடிவு செய்யாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசை கண்டித்தும், பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று(வியாழக்கிழமை) முதல் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னை, கோவை, நெல்லை, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று அதிகாலை முதலே சென்னையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அனைத்து மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில்களில் பயணிகள் தொங்கியபடி சென்றனர்.
இதற்கிடையே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை ரெயில்பாதை பணிகள் நடைபெறுவதால் இன்று காலையில் மின்கார ரெயில்களும் சீராக வராமல் தாமதமாக வந்தது-. இதனாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.