“புதுச்சேரி மக்களுக்கு காங்கிரசில் இருந்து விடுதலை”-மோடி பேச்சு
1 min readPuducherry people freed from Congress – Modi speech
25.2.2021
புதுச்சேரி மக்கள் இப்போதுதான் காங்கிரஸ் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
புதுவையில் ஜனாதிபதி ஆட்சி
புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது-. இதனை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கொடுத்தார். இதுபற்றியும் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார். இதனைஅடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பேச்சு
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வருக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா, ஆகியவற்றில் புதுச்சேரி சிறந்து விளங்கும்
முதல் வாக்குறுதி
முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது. அடுத்து அமையப் போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது. மக்கள் சுதந்திரத்தை உணர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் மேலிட உத்தரவு படி இயங்கிய அரசு புதுச்சேரியில் அனைத்தையும் அழித்தது.
புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் தேர்தல் வாக்குறுதி. வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றின் மையம் புதுச்சேரி.
பொய் சொன்னார்
புதுச்சேரி முதல் அமைச்சர் மீது பெண் ஒருவர் குறை சொன்ன வீடியோவை தேசமே பார்த்தது ஆனால் முதல் அமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே (ராகுல்காந்தியிடம் ) பொய் கூறினார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் இடையூறாக இருந்தது. ஜனநாயக விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பார்கள் காஷ்மீரில் கூட தேர்தல் நடந்த நிலையில், புதுச்சேரியில் நடத்தாதது ஏன்?. புதுச்சேரியின் மாண்பை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
‘பாரத் மாதா கி ஜே’ வந்தே மாதரம்
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.