May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. – தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டில் இழுபறி

1 min read

ADMK. – DMDK. Drag on block distribution

3.3.2021

அ.தி.மு.க – தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டில் இன்று முடிவு எட்டவில்லை. தொடர்ந்து இழுபறிநிலை நீடிக்கிறது.

தே.மு.தி.க.

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தாலும் தங்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளித்து வந்தார். நிர்வாகிகள் கூட்டத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தனது ஆதங்கத்தையும் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அ.தி.மு.க.& -பாரதீய ஜனதா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியபோதே, அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க.வுக்கும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொள்ளாத சூழலில் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகளுடன், அ.தி.மு.க. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் இறங்கியது. இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. காரணம், பா.ம.க.வுக்கு வழங்கியதை விட தங்களுக்கு அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டது தான்.

இதனை அடுத்து கடந்த 1-ந் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதனை தே.மு.தி.க. மறுத்ததுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் இல்லை. இதையடுத்து அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

எடப்பாடி ஆலோசனை

இதற்கிடையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் தே.மு.தி.க.வை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதேவேளை தே.மு.தி.க.வினருடன், தி.மு.க. மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

பேச்சு வார்த்தை

இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் மாலை 5.40 மணிக்கு வந்தனர்.

அங்கு அவர்களுடன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் 3-ம் கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரவு 7.10 மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இழுபறி

இந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நிலையே உள்ளது. அதாவது பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் அல்லது 20 தொகுதிகளாவது ஒதுக்கவேண்டும் என்று தே.மு.தி.க. கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அ.தி.மு.க. தயங்கியதாகவும், பலமுறை கேட்டுப்பார்த்தும் தே.மு.தி.க. தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.
இன்று மாலை 6.30 மணிக்கு தேமுதிகவுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக தரப்பில் மாநிலங்களவை எம்.பி. சீட் மற்றும் பாமகவுக்கு நிகராக எங்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்கபட்டதால் இழுபறி என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.