நாசரேத் அருகே புதையல் எடுப்பதற்காக வீட்டில் சுரங்கம் தோண்டிய 2 பேர் சாவு: 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read2 killed in treasure hunt near Nazareth: 2 admitted to hospital
29.3.2021
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே புதையல் இருப்பதாக கருதி வீட்டில் 40 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டிய போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்தையா (65). இவரது மகன்கள் சிவமாலை (40), சிவவேலன் (37). இவர்கள் குடும்பத்தோடு ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு பின்னால் உள்ள இடத்தில் புதையல் இருப்பதாக யாரோ தெரிவித்துள்ளனர். இதை நம்பி கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் குழி தோண்டியுள்ளனர்.
சுமார் 40 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதிலிருந்து 7 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்த வேலையை செய்துள்ளனர். வழக்கம் போல் நேற்று சுரங்கம் தோண்டும் பணியில் சிவமாலை, சிவவேலன் மற்றும் சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் நிர்மல் கணபதி (17), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஆலமரத்தான் மகன் ரகுபதி (40) ஆகிய 4 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாலையில் சிவவேலனின் மனைவி ரூபா வேலை செய்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது, 4 பேரும் மூர்ச்சையாகி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவருக்கும் லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள் ளது.
இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத் தினர் உடனடியாக நாசரேத் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார், நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, நாசரேத் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று குழிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 பேர் சாவு
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி 4 பேரையும் மீட்டனர். ஆனால், சிறிது நேரத்தில் நிர்மல் கணபதி, ரகுபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவமாலை, சிவவேலன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நாசரேத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டியதால் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதை 4 பேரும் சுவாசித்ததால் இந்த துயர சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.