சுரண்டையில் தபால் வாக்கு செலுத்தியதை முகநூல், வாட்ஸ் அப்பில் பதிவிட்ட ஆசிரியை சஸ்பெண்டு
1 min readSuspend teacher who posted postal vote on Facebook
29.3.2021
தபால் வாக்கு அளித்ததை முகநூல், வாட்ஸ் அப்பில் பதிவிட்ட ஆசிரியை குறித்து காங்கிரஸ் வேட்பாளர் புகார் அளித்ததின் பேரில், ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
ஆசிரியை
சட்டசபைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்கு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் வாக்குகள் அந்தந்தத் தொகுதிக்கு அனுப்பப்பட்டு, சேகரித்து வைக்கப்படும். பின்னர் வாக்கு எண்ணிக்கை அன்று தபால் வாக்குகள் சேர்த்து எண்ணப்படும்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சரகம், கரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் தனது தபால் வாக்கைப் பதிவு செய்து அதன் விவரங்களை வாட்ஸ் அப், முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் அதன் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்குப் புகாராக அனுப்பினார்.
சஸ்பெண்டு
இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியை தேர்தல் நடத்தை விதியை மீறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரிலும், அவர் நேற்று முதல் ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்படுவதாக மாவட்டக் கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.
அந்த ஆசிரியை தன் மீது தவறு இல்லை என்றும் தன் மீதான நடவடிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு மனு கொடுத்துள்ளார்.