கடனாநதியும் – ராமநதி இணைக்கப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
1 min readKadanandi and Ramanadi will be merged: DMK leader MK Stalin’s promise
30.3.2021
கடனாநதியும் ராமநதி இணைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆலங்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:&
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். நீர்ப்பாசன வசதியை பெருக்க கடனாநதியையும்- ராமநதியையும் இணைக்கப்படும்.
தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, குளிர்பதன கிடங்கு, மாம்பழச்சாறு தயாரிப்பு தொழிற்சாலை, கொப்பரை தேங்காய்களை காய வைக்க மின் உலர் சாதன வசதி ஏற்படுத்தப்படும்.
தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்படும். சங்கரன்கோவிலில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தென்காசியில் பீடி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும்.
ராமநதி அணை, புதுக்கால்வாய், பாசன வாய்க்கால் தூர்வாரப்படும். புளியங்குடியில் குளிர்பதன கிடங்கு, எலுமிச்சையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும்.
செண்பகவல்லி அணை திட்டம், இரட்டைகுளம் கால்வாய் திட்டம், சேர்வலாறு,- ஜம்புநதி நீர்த்தேக்க திட்டம் செயல்படுத்தப்படும். குண்டாறு அணையின் உயரத்தை கூட்டி, அதிக அளவில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் பகுதியில் 163 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
விடுதலைப் போராட்ட வீரர் வெண்ணிக் காராடி நினைவை போற்றும் வகையில் விஸ்வநாதபேரியில் சிலை அமைக்கப்படும். இந்த திட்டங்கள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. அதனால், தமிழகத்தை முன்னேற்ற 10 ஆண்டுகளுக்கு ஆற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்களை அறிவித்துள்ளேன். அதை உறுதியாக நிறைவேற்றுவேன். அதற்கு திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றால்தான் நான் முதல்வராக வந்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.