May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

தெரிந்து கொள்வோம் தேர்தல் வரலாறு(14):2011: மூன்றாவது முறையாக ஆட்சியைப்பிடித்தார், ஜெயலலிதா

1 min read

Let us know Election History (14): 2011: Jayalalithaa came to power for the third time

9/4/2021
2006க்கும், 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் குறுக்கிட்டது. இதில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தன.
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த காங்கிரசுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து கொண்டது. தேமுதிக தனித்து
களம் கண்டது.
இலங்கை போர் தீவிரமாக நடைபெற்ற நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்பட்டது. டைரக்டர் சீமான் தலைமையில் சினிமா கலைஞர்கள் சிலர் திரண்டு இலங்கை
பிரச்சினையை மையப்படுத்தி, காங்கிரசுக்கு எதிராக பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். அப்படி இருந்தும் முந்திய (2004) தேர்தலைவிட அதிக இடங்களை மத்தியில் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
தமிழகத்திலும், புதுவையிலும் சேர்த்து, 40-ல் 28 தொகுதிகளை திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. (திமுக 18, காங்கிரஸ் 9, விடுதலைச்சிறுத்தைகள் 1).
மீதி 12 இடங்கள் அதிமுக கூட்டணி வசம் சென்றன. (அதிமுக 9, மதிமுக 1, மார்க்சிஸ்ட் 1, இந்திய கம்யூ 1).
திமுக அணி வாக்குகள் 1,29,29,043 (42.54 சதவீதம்)
அதிமுக அணி வாக்குகள் 1,15,44,419 (32.09 சதவீதம்)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாமக 6 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறிலும் தோல்வி அடைந்தது.
முக அழகிரியின் தேர்தல் பிரவேசம் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முதல்முறையாக தேர்தல் களம் கண்டு, மதுரை தொகுதியில் போட்டியிட்டு 1,40,985 ஓட்டு
வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.
தேமுதிக ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றாலும், 31
லட்சத்து 26 ஆயிரத்து 117 வாக்குகளைப்பெற்று (10.3 சதவீதம்) வலுவான சக்தியாக அடையாளம் காட்டிக்கொண்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் சட்டமன்றத்தேர்தல் வந்தபோது, தேமுதிகவை வசமாக அதிமுக கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டது. யாருடனும்
கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த விஜயகாந்தை, அதிமுக பக்கம் அழைத்து வந்ததில் எழுத்தாளர் துக்ளக் சோ முக்கிய பங்காற்றினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் ஆகியவை இடம் பெற்றன. நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தது.
அதிமுகவுடன் கருத்து வேறுபாட்டால் வெளியேறிய மதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டது.

ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுடன் பாமக மீண்டும் வந்து கூட்டணியில் சேர்ந்து கொண்டது. காங்கிரசும் கூட்டணியில் நீடித்தது. திமுக ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி, கலைஞர் வீடு கட்டும்
திட்டம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் போன்றவை மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தபோதும், 2ஜி ஊழல் புகார் ஊதிப்பெரிதுபடுத்தப்பட்டதில்
கட்சியின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தபோதும், சிபிஐ ரெய்டுகளை ஏவி மிரட்டி தொகுதிப்பங்கீட்டில் 63 இடங்களை
வலுக்கட்டாயமாகப்பெற்றுக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பாமக அதன் பங்குக்கு 30 இடங்களை வாங்கி போட்டியிட்டது.
திமுகவுக்கு ஆதரவாக ‘வைகைப்புயல்’ வடிவேலு சூறாவளிப்பிரசாரம் செய்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் நல்ல கூட்டம் கூடியது.
ஏப்ரல் 13-ந் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 77.8 சதவீத வாக்குகள் பதிவாயின. ஒரு மாதம் கழித்து மே 13-ந் தேதி தான் வாக்குகள்
எண்ணப்பட்டன.
அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் பெரும் வெற்றியை ஈட்டின. திமுக அணி படுதோல்வியை சந்தித்தது.
அதிமுக 148, தேமுதிக 29, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூ 9, சமத்துவ மக்கள் கட்சி 2, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, பார்வர்டு பிளாக் 1.
திமுக 23, காங்கிரஸ் 5, பாமக 3.
அதிமுக அணி வாக்குகள் 1,90,85,762 (51.9 சதவீதம்)
திமுக அணி வாக்குகள் 1,45,30,215 (39.5 சதவீதம்)
அதிமுகவுக்கு 6-வது முறை ஆட்சி (1977, 80, 84, 91, 2001, 2011)
ஜெயலலிதாவுக்கு 3-வது முறை ஆட்சி (1991, 2001, 2011) என்ற வகையில், 16-5-2011 அன்று ஜெயலலிதா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார்.
29 இடங்களைப்பெற்ற தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவரானார்.
அடுத்து, 2014-ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமர் ஆனபோதிலும், தமிழ்நாட்டில் அதிமுக தனித்து நின்று, மோடியா
இந்த லேடியா (ஜெ) என்று சவால் விட்டு, 39-க்கு 37 இடங்களை வென்றது.
திமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. தேமுதிக, பாமக, பாஜக,
மதிமுக சேர்ந்து மோடி பிம்பத்தைப்பயன்படுத்தி, 3-வது அணியாக நின்றதில், பாமக தர்மபுரியிலும், பாஜக கன்னியாகுமரியிலும் வெற்றி பெற்றன.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதா பதவி விலகினார் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில்
போட்டியிட்டு 41,848 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அவர் முதல்-அமைச்சர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களுரு கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி
இருந்தது.
2001 ஆட்சிக்காலத்தில், ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த அவர் முதல்- அமைச்சராகப்பதவி ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் பதவி விலகியது போல், 2014-லும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 27-9-14ல் இந்த அதிரடித்தீர்ப்பை வழங்கிய நீதிபதி மைக்கேல் குன்கா, உடனடியாக ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சிறைக்குச் செல்ல உத்தரவிட்டார். இதன் காரணமாக அன்றே ஜெயலலிதா பதவி விலக நேரிட்டது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பதவியில் இருந்தும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த முறையும் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார்.
சிறையில் இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன்பிறகு தன் மீதான தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதி குமாரசாமி இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரையும் விடுவித்தார்.
இதையடுத்து, 23-5-15 அன்று ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராகப்பதவி ஏற்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஆர்கே நகர் எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்தார். காலியான அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூன்) தேர்தல்
நடைபெற்றது.
இதில் ஜெயலலிதாவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான திமுக போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்டு மட்டும் வேட்பாளரை நிறுத்தியது. தேர்தல் முடிவில் 1,50,722 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார்.
ஜெயலலிதா 1,60,432
மகேந்திரன்(இந்திய கம்யூ) 9,710.

(2016 தேர்தல் நிலவரத்தை அடுத்து காண்போம்).

-(கட்டுரையாளர்: மணிராஜ்,

திருநெல்வேலி).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.