May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வம்

1 min read

Public interest in the vaccination festival

14.4.2021

தமிழகத்தில் தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டனர்.

தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை புதியஉச்சத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தொட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டு உள்ளது. நேற்று 8 ஆயிரத்தை நெருங்கியது.
தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இன்று காலை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1900 மினி கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடங்களில் இருக்கும் கட்டமைப்பின்படி தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1.63 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கென்று தனியாக மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது போடப்பட்டு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களிலேயே தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி திருவிழா தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.

தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவில் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தடுப்பூசி திருவிழா முடிந்த பிறகும் தினமும் 2 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணை போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பிறகு 8 வாரங்களுக்குள் 2-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.