தடுப்பூசி, ஆக்சிஜன் குறித்த விமர்சனம்: ராகுல், பிரியங்காவுக்கு பா.ஜனதா கண்டனம்
1 min read
Vaccine, Oxygen Review: BJP condemns Rahul and Priyanka
22/4/2021
கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ள ராகுல் காந்திக்கும் பிரியங்காவுக்கும் பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஆக்சிஜன்
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் அதன் விலைகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதைப்போல நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியிருந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, இந்த சூழலில் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்ததை கடுமையாக கண்டித்து இருந்தார்.
ராகுல், பிரியங்காவின் இந்த விமர்சனத்துக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கொரோனாவுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய இந்த தருணத்தில், ராகுல்-பிரியங்காவின் வெட்கக்கேடான ஆணவத்தை நாடு பார்த்து வருவதாக பாரதீய ஜனதா கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:-
நெருக்கடியான காலக்கட்டம்
ராகுல், பிரியங்காவும், காங்கிரஸ் கட்சியும் தடுப்பூசியை தாராளமயமாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களோ, தாங்களே தடுப்பூசி வாங்க வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தற்போது அதற்கு மத்திய அரசு அனுமதித்திருக்கும்போது, இதனால் தனியார் நிறுவனங்கள் பயனடையும் என ராகுல்காந்தி குற்றம் சாட்டுகிறார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தனியார் நிறுவனங்கள்தான் மிகுந்த உதவியாக இருக்கின்றன.
கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் நிறுவனங்களே காரணம். தனியார் ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் ஏராளமான உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். தடுப்பூசி தயாரிப்பிலும் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
ஆக்சிஜனில் இருந்து மருந்துகள் வரை தனியார் நிறுவனங்கள் நாட்டுக்கு உதவி வருகின்றன. ஆனால் ராகுல்-பிரியங்காவை பொறுத்தவரை, இந்த தனியார்களை புறந்தள்ளிவிட்டு நாம் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உதவியை கோர வேண்டும் என விரும்புகின்றனர்.
வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்ததாக பிரியங்கா, தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். வெறும் 4 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள ஆக்சிஜன் அனைத்தும் தொழில்துறைக்கானது. அதேநேரம் ஆக்சிஜன் உற்பத்தி அளவு 7 ஆயிரம் மெட்ரிக் டன் அளவை எட்டியிருக்கிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் கிடைப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.