May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் போலீஸ் சரக எல்லையை தாண்ட பொதுமக்களுக்கு தடை

1 min read

Police bar public from crossing cargo border in Chennai

18.5.2021

சென்னை காவல்துறையினர் இன்று முதல் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி போலீஸ் சரகத்தில் இருந்து வெளியே செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு (24-ந்தேதி காலை வரை) முழு ஊரடங்கை அறிவித்தது.

முதலில் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்பட்டது.
காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வைத்து இருக்க வேண்டும் என்று கடந்த 14-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இருப்பினும் சென்னையில் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. பலர் முழு ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் சுற்றுவது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

கட்டுப்பாடுகள்

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் இதுபோன்ற நடமாட்டத்தால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை போலீசார் நேற்று முதல் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இன்று முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

153 வாகனத் தணிக்கைச் சாவடிகள்

ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டார்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர்.

வாகனங்கள் பறிமுதல்

அரசால் அனுமதிக்கப்பட்ட (காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை) நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் இ-பதிவு செய்து இருக்க வேண்டும். இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை இன்று சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கடுமையாக அமல்படுத்தினர்.

சென்னை காவல்துறையினர் இன்று முதல் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உரிய சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை மாநகர் முழுவதும் 348 செக்டார்களாக பிரிக்கப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தனிப்படையினர் தடையை மீறி வெளியில் வந்தவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்குப் பதிவு செய்தனர்.

இ பதிவு

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறு காவல் நிலைய எல்லைக்கு சென்றவர்களும் உரிய இ-பதிவு செய்திருக்க அறிவுறுத்தப்பட்டது. இ-பதிவு செய்யாதவர்கள் தங்கள் பகுதியை தாண்டி மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

சென்னையில் போலீசார் 205 இரு சக்கர ரோந்து வாகனங்களிலும், 309 நான்கு சக்கர வாகனங்களிலும் ரோந்து சுற்றி வந்தனர். பொதுமக்கள் தங்கள் பகுதியை விட்டு வேறு இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு இருந்தன.

சாலைகள் சீல் வைப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வேப்பேரி ரித்தர்டன் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சீல் வைத்து போலீசார் கண்காணித்தனர். முக்கிய சந்திப்புகளில் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் இன்று அனுமதிக்கப்படவில்லை.

முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய கட்டுப்பாடுகளை கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தடையை மீறி சுற்றிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் முன்களப் பணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.