May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கு நீடிப்பது பற்றி நாளை ஆலோசனை;முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

1 min read

Consultation tomorrow about prolonging the curfew; Interview with Chief Minister MK Stalin

21/5/2021-
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் நாளை (சனிக்கிழமை) விவாதித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி என்ஐடி வளாகத்தில் இன்று கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கைப் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 9 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான மருந்து உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் நாளை காலை (சனிக்கிழமை )மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்.

கொரோனா நிவாரணம்

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 3-ம் தேதிக்குள் 2-வது தவணை தொகை வழங்கப்பட்டுவிடும். அரசின் முழு கவனமும் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-

16,938 படுக்கை வசதிகள்

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த 2 வாரங்களில், 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 30 இயற்கை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 375 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் வெளிமாநிலங்களில் இருந்து 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் நாள்தோறும் பெறப்பட்டுள்ளது.

மேலும் புதிதாகப் பல்வேறு நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக 2,000 மருத்துவர்களும், 6,000 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகிழ்ச்சிக்குரிய நாள்

புதிதாக அமைந்துள்ள திமுக அரசு கொரோனா தடுப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரோனாவைக் கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ மகிழ்ச்சி அடைவோம். கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என்று கூறும் நாள்தான் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கும். பாசிட்டிவ் என்று சொல்லலாம். ஆனால், என்றைக்கு நெகட்டிவ் என்று சொல்லப்படுகிறதோ அன்றுதான் நான் முழு மகிழ்ச்சி அடைவேன்.

இந்த நேரத்தில் தனது உயிரைக் கொடுத்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அனைவருக்கும் அரசின் சார்பில் இதயபூர்வமான நன்றி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.