May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பாலியல் தொல்லை விவகாரம்: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன்

1 min read

Sexual harassment: Summoned by Child Rights Protection Commission

25/5/2021
சென்னையில் தனியார் பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் தொல்லை குறித்த விசாரணைக்கு வரும்படி, கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

சென்னை, கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன்(வயது 59) பாலியல் தொல்லை அளித்ததாக, புகார் எழுந்தது.

‘ஆன்லைன்’ வகுப்பின் போது, ‘வாட்ஸ் -ஆப்’ வாயிலாக மாணவியருக்கு, ஆபாச தகவல்கள் அனுப்பியதாகவும், மொபைல் போனில் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து, அசோக் நகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து நங்கநல்லுார், இந்து காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ராஜகோபாலனை, போலீசார் கைது செய்து, வடபழநி காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரித்தனர்.

அவரது மொபைல் போன், மடிக்கணினி ஆகியவற்றையும் ஆய்வு செய்த போலீசார், அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப்பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் விசாரணையில், தன்னிடம் படித்த முன்னாள், இந்நாள் மாணவியருக்கு, ராஜகோபாலன் ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

ஆன்லைனில் இருக்கும் மாணவியரை, ‘வாட்ஸ் ஆப்’பில், தொடர்பு கொள்ளும் ராஜகோபாலன், முதலில் அழகை பற்றி வர்ணிப்பது பின், அணிந்து இருக்கும் உடை குறித்து கேட்பது என, சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.சில மாணவியரிடம், அந்தரங்க படங்கள் கேட்டதும், வீடியோ காலில் பேசும் போது, அரை நிர்வாணத்துடன் தோன்றி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, ‘போக்சோ’ உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர். பின், மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர். பள்ளியில் இருந்தும் ராஜகோபாலன், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

சம்மன்

பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், ராஜகோபாலன் மீது, முன்னாள், இந்நாள் மாணவியர் என, 25 பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் மொபைல் போன் எண் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.இவர்களில், சென்னையை சேர்ந்தவர்கள், 10 பேர். இந்த புகார்கள் குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.