காஞ்சீபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் எழுதிய வாசகம் “மக்களிடம் செல், அவர்களை நேசி, சேவை செய்… அண்ணா வகுத்துத் தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும்”
1 min readதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பாதிப்பு காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்வராக பதவியேற்ற பிறகு, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்கு ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினர். அதன் பிறகு தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அவரும், அவர் தலைமையிலான அரசும் மக்கள் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட அயராத முயற்சிகளால் தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் சென்றார். அங்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். அங்கிருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் அரிய புகைப்படங்களை கண்டு ரசித்த ஸ்டாலின், அண்ணாவின் வாக்கியமான, “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய். இது அண்ணாவின் வார்த்தை. அவர் வகுத்துத் தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும்” என்று அங்கிருந்த குறிப்பேட்டில் எழுதி கையெழுத்திட்டார்.
ஸ்டாலினுடன் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் ஆட்சியர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர் ஆகியோர் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு அண்ணா பெயர் சூட்டப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “பட்ஜெட் கூட்டத்தொடரில் திட்டங்களை அரசு அறிவிக்கும் போது அது உங்களுக்கே தெரியும்” என ஸ்டாலின் பதில் அளித்தார்.
–மணிராஜ்,
திருநெல்வேலி.