உத்தரகாண்ட் மாநில புதிய முதல்-மந்திரியாக புஷ்கர்சிங் தாமி பதவி ஏற்பு
1 min read
Pushkar Singh Tami sworn in as new First Minister of Uttarakhand
4.7.2021
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, திரிவேந்திர சிங் ராவத் முதல்-மந்திரி பதவி ஏற்றார். அவருக்கும், மந்திரிகளுக்கும், எம்.எல்.ஏ.களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. சொந்தக்கட்சியிலேயே எதிர்ப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த மார்ச் மாதம் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு புதிய முதல்-மந்திரியாக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10-ந் தேதி பதவி ஏற்றார். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பவுரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அரசியல் சாசனப்படி முதல்-மந்திரி பதவியை ஏற்ற 6 மாதங்களில் சட்டசபை உறுப்பினராக வேண்டும். இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், கொரோனா காலம் என்பதால் அங்கு ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்று தீரத் சிங் ராவத் பதவியைத் தக்க வைக்கும் சூழல் இல்லை. இதனால் அங்கு அரசியல் குழப்பம் நிலவியது.
ராஜினாமா
இதற்கிடையே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்-மந்திரியை மாற்ற பா.ஜ.க. தலைமை முடிவு எடுத்தது.
இதற்காக தீரத் சிங் ராவத் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவர் கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் டேராடூன் திரும்பினார். அவர் பதவி விலகுமாறு தலைமை அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அவர் இரவு 11 மணிக்கு மந்திரிகள் சுபோத் உனியால், அரவிந்த் பாண்டே, விஷான் சிங், கணேஷ் ஜோஷி உள்ளிட்டவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.அவர் கவர்னர் பேபிராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் நேற்று நடந்தது. இதில் மேலிட பார்வையாளராக மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். புதிய முதல்-மந்திரியாக புஷ்கர்சிங் தாமி (வயது 45) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை மேலிட பார்வையாளரான மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்தார்.
பதவி பிரமாணம்
இந்த நிலையில் உத்ரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுக்கொண்டார். மாநில கவர்னர் பேபி ராணி மொரியா புஷ்கர் சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவையில் மந்திரிகளாக பிஷன் சிங் சுபால், சுபோத் யூனியல், அரவிந்த் பாண்டே மற்றும் கணேஷ் ஜோஷி பதவியேற்றனர்.
தீரத்சிங்ரவாத ராஜினாமா செய்ததால் டேராடுனில் நடந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்தார்.
பதவி ஏற்பு விழாவில் சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத் மற்றும் பிற பாஜக தலைவர்கள் புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.