May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

திருவாரூரில் மு.க.ஸ்டாலின்; தாய்-சேய் நலப்பிரிவை திறந்து வைத்தார்

1 min read

MK Stalin in Thiruvarur; Thai-Sai opened the welfare unit

7.7.2021

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்தார். அப்போது மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்தார் அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று காலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உடன் இருந்தனர்.

இன்று (7-ந்தேதி) காலை புறப்பட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரூ.10½ கோடி மதிப்பில் மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் (தாய்-சேய் நலப்பிரிவு), 4 அறுவை சிகிச்சை மையங்கள் கட்டப்பட்டுள்ளது. 70 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் விமலாவுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து கார் மூலம் திருக்குவளையில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்று அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திருவெண்காடு சென்று மதிய உணவுக்குப்பின் கார் மூலம் சென்னை திரும்புகிறார்.

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்று முதல் முறையாக சொந்த ஊரான திருவாரூருக்கு வந்த மு.க.ஸ்டாலினை பொதுமக்களும் தி.மு.க.வினரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.