டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
1 min read
Two killed in Delhi shooting
9/7/2021-
டெல்லியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு
தலைநகர் டெல்லியின் பாரா இந்து ராவ் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு பொதுமக்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அப்பகுதிக்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். ஆனாலும், அந்த மர்மநபர்கள் 20 முதல் 25 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றனர்.
விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார்? எதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ஒருநபரை கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அந்த துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக வேறுநபர்கள் மீது குண்டு பாய்ந்து 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.