July 6, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆயுர்வேதத்தை உலகறிய செய்த டாக்டர் பி.கே.வாரியர் 100வது வயதில் மரணம்

1 min read

Dr. BK Warrior, who made Ayurveda world famous, dies at the age of 100

10/7/2021

கேரள மாநிலத்தில் உள்ள, ‘கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை’யின் நிர்வாக அறங்காவலராகவும், ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கும் மூத்த டாக்டருமான பி.கே.வாரியர், தன் 100வது வயதில் இன்று மரணம் அடைந்தார்.

கடந்த 1921ம் ஆண்டு, ஜூன் 5ம் தேதி, மலபார் மாவட்டத்தில் பிறந்தவர் பன்னியம்பள்ளி கிருஷ்ணன்குட்டி வாரியர் (பி.கே.வாரியர்). கோட்டக்கல் கிராமத்தில் உள்ள ஆர்ய வைத்திய பாட சாலையில் ஆயுர்வேதம் படித்து பட்டம் பெற்றார். அதன் பின், கடந்த 1954ல் கோட்டக்கல் மாவட்டத்தில் செயல்பட்ட ஆர்ய வைத்ய சாலையின் (ஏவிஎஸ்) மேனேஜிங் டிரஸ்டியாக பதவியேற்றார். அதன் மூலம் வைத்யசாலையை நிர்வகித்ததுடன், அங்கு தலைமை மருத்துவராகவும் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், ஏவிஎஸ் பலமானதாக மாறியதுடன், பல இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

கட்டுரைகள்

ஆயுர்வேதத்தை விஞ்ஞான ரீதியில் கற்றுக் கொடுத்து வந்தவர் வாரியர். அதேநேரத்தில் மற்ற சிகிச்சை முறைகளையும் ஏற்று கொண்டு, அதனையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அவர் எழுதிய பல கட்டுரைகள், உரைகள் சமகால மருத்துவத் துறைக்கு பெரிதும் பயன்பட்டு வருகின்றன. அவர் எழுதிய பல கட்டுரைகள் மலையாளத்தில் தொகுக்கப்பட்டு ‘பாடமுத்ரகல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் ஆயுர்வேத கல்வி குறித்து கவனம் செலுத்தியுள்ளார். அவரது நிர்வாகத்தின் போதுதான் ஆயுர்வேத பாடசாலை கல்லூரியாக மாறியது. மேலும், கோழிக்கோடு பல்கலையின் ஆயுர்வேத துறையின் டீனாகவும் வாரியார் பதவி வகித்துள்ளார். ஆய்வு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

அவரது பணியை பாராட்டி, கோழிக்கோடு பல்கலை, கடந்த 1999ம் ஆண்டு வாரியருக்கு டி.லிட்., பட்டம் அளித்து கவுரவப்படுத்தியது. அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ் தலைவராக, 1981 மற்றும் 2003ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டார்.

ஏவிஎஸ்.,ல் விஞ்ஞான முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த 1996ம் மாஸ்கோவில் நடந்த ஆயுர்வேதம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி ரஷ்ய மருத்துவ அமைப்பு அழைப்பு விடுத்தது. அதன்பின், 1998ம் ஆண்டு வாரியர் தலைமையில் குழவினர் நியூயார்க் நகரில் நடந்த, ’21ம் நூற்றாண்டிற்கான ஆயுர்வேதம்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். நியூயார்க் நகரில், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிற்கான இந்திய பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் ஆயுர் வேதம் குறித்து உலகளவில் பரவ தொடங்கியது.

பத்மபூஷண்

பி.கே.வாரியருக்கு 1999ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2010ல் பத்ம பூஷண் விருதையும் இந்திய அரசு வழங்கி கவுரப்படுத்தியுள்ளது. 100 வயதான பி.கே.வாரியர் கோட்டைக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.