தமிழா, தமிழா?/1.அகவை தினம்/ முத்துமணி
1 min read
Tamila, Tamila?/1.Akavai Day /Muthumani
18.7.2021
நல்ல தமிழில் பேச வேண்டுமென்ற சொல்லப்போனால் கொஞ்சம் உயர்ந்த நடையில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற ஆவல் தமிழரிடத்து, குறிப்பாக இளைஞர் பலருக்கும் அண்மைக்காலமாக நிரம்பக் காணப்படுவதை, அவர்கள் சமூக ஊடகங்களில் செய்யும் பதிவுகள் மூலம் அறிந்துகொள்ள இயலும். இது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு செயல்.
தாய்மொழி குறித்து மனதுக்குள் ஒரு பெருமை கொண்டாலொழிய இத்தகு செயல்கள் நடைபெறாவென்று எண்ணுகிறேன்.
சுவரொட்டிகளில்,
….இன்று ஐம்பதாம் அகவை தினம் காணும் அண்ணனை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்….🎉
…. முகநூல் செய்திகளில்,
என் மகளுக்கு இன்று அகவை தினம். வாழ்த்துங்கள் நண்பர்களே…🎉
என்பவை போன்ற மகிழ்ச்சி அறிவிப்புகளைப் பார்க்க நேரிடுகிறபோதெல்லாம்,
“இன்று என் டாட்டர்ஸ் ஹேப்பி பர்த்டே.விஷ் பண்ணுங்க”என்பது காணாமல் போயிருக்கிறது என்னும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்… உடனே மூளைக்குள் வழக்கமான அந்தக் குறுகுறுப்பும் தோன்றிவிடுகிறது.
அதென்ன அகவை தினம்.🎉?
என் மகளுக்கு இன்று பிறந்த நாள் என்றோ, .…இன்று பிறந்தநாள் காணும் தலைவரை வாழ்த்துகிறோம்…. என்றோ, இன்று இனிய பிறந்தநாள் கொண்டாடும் தம்பி நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.. …என்று சொல்வதில் என்ன குறைவு இருக்கப்போகிறது? எதற்காக அகவை எனும் சொல்லைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்த வேண்டும்?
நாங்களும் தூய தமிழில் பேசி விட்டோம் என்ற பெருமைக்காக எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் இயற்சொல் இருக்கும்போது கற்றோருக்கே அரிதில் பொருள் விளங்கும் திரிசொல்லாகிய “அகவை’என்னும் சொல்லைப் பொருள் அறியாமல் பயன்படுத்துகிறோம் என்பதை உணராமல் பயன்படுத்தி வருகின்றனர்.
அகவை என்னும் சொல் பிறந்த என்னும் பொருள் தருகிறது, எனத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாக இந்தத் தவறு நேர்ந்துவிட்டது.
உண்மையில் அகவை என்னும் சொல் வயது என்னும் பொருளைத்தான் தரும்.
அப்படியானால் அவர்கள் கூற்றுப்படி அகவை தினம் என்பது, வயது தினம் என்பதைத்தானே குறிக்கும். வயது தினம் என்றால் என்ன?!! இத்தொடர் பிறந்தநாள் என்பதை எப்படிக் குறிக்கும்?.
என் அகவை அறுபது.
அவனுடைய 50 ஆம் அகவையில்தான் அவனுக்கு மகன் பிறந்தான்.
பாரதி தன் நாற்பதாம் அகவையை எட்டும் முன் இறந்து போனான்.
கோவலன் கண்ணகியை மணந்தபோது அவளுக்கு அகவை 12 மட்டுமே.
இலக்கியச் சான்று.
ஈராறாண்டு அகவையாள்
(சிலப்பதிகாரம்)
அகவை 65 ஆனபோதிலும் அவருக்கு நரைதிரை தோன்றவில்லை.
அகவை என்னும் சொல் இப்படித்தான் பயன்பாட்டில் வரும். இப்போது தெளிவாகத் தெரியும், அகவை என்பது வயதை மட்டுமே குறிக்கிறது என்னும் உண்மை. பின்னர் அகவை தினம் என்னும் தொடர், பிறந்தநாள் என்பதைக் குறிப்பதில்லை என்பதை உறுதியாகக் கூறலாமன்றோ?..
மேலும், தொடரில் இடம்பெறும் தினம் என்னும் சொல்லும் தமிழ்ச் சொல்லன்று.. நாள் என்பதே தூய தமிழ்ச்சொல்.
எனவே எப்படிப் பார்த்தாலும் பிறந்தநாள் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர ‘அகவை தினம்’ என்று சொல்லுவது தவறான வழக்கு…
(தொடரும்)
தமிழ் முத்து மணி…
15.7 21.
பிறந்த நாள்
அகவை தினம் ஆகாது என்ற
விளக்கம் அருமை ஐயா.