May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

1 min read

AIADMK files case against former minister MR Vijayabaskar

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

25.6.2021
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்யப் போடப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்துவந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மு.க.ஸ்டாலின் கூறிவந்தார்.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், சகோதரர் சேகர், மனைவி விஜயலட்சுமி உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர்.

அதேபோல், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றறது. விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களை பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்தவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராக இருந்தபோது வரவு-செலவுகளை ஆராய்ந்ததில் இந்த தகவல் வெளிவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது, சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஜூலை 25) தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.