May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மரணம்

1 min read

Veteran actress Jayanthi dies

26.7.2021

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76) உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாகவும், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவாலும் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 26) மரணம் அடைந்தார்.

தமிழ் திரைப்படத் துறையில் மறக்க முடியாத நடிகைகளில் ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக 1960 – 70 களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகையாக வலம் வந்தவர்.

கர்நாடகத்தில் பிறந்தவர்

கர்நாடக மாநிலம், பெல்லாரியில் 1945ம் ஆண்டு ஜனவரி் 6ம் தேதி பாலசுப்ரமணியம் – சந்தான லக் ஷ்மி தம்பதிக்கு மகளாக பிறந்தார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு துணை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவருக்கு கே.பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நாகேஷிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பெற்றார்.

அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழடைந்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெயந்தி நடித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ‘எதிர் நீச்சல்” ‘இரு கோடுகள்’ ‘புன்னகை’ ‘கண்ணா நலமா’ வெள்ளி விழா என்று இவருடைய வெற்றிப் பயணம் தமிழ் திரையுலகில் தொடர்ந்தது. அன்றைய முன்னணி கதாநாயகர்களாக போற்றப்பட்ட அத்தனை பேருடனும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் என பலருடன் ஜெயந்தி நடித்துள்ளார்.

கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து அங்கே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்தி இருந்தார். இவர் ராஜ்குமாருடன் ஜோடியாக 30 கன்னட படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஏறக்குறைய 500 படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர். அபிநய சாரதே என திரையுலகில் அழைக்கப்படும் இவர் 6 முறை கர்நாடக மாநில அரசின் விருதை பெற்றுள்ளார். இதுதவிர நிறைய தனியார் அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
வயதான பிறகு ஜெயந்தி பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து வசந்தம் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்

கணவர்

நடிகரும், இயக்குனருமான பெகடி சிவராமனை திருமணம் செய்த இவருக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார்.

ஜெயந்தியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயந்தி நடித்த தமிழ் திரைப்படங்கள் வருமாறு:-

  1. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் – துணை நடிகை
  2. நினைப்பதற்கு நேரமில்லை – துணை நடிகை
  3. இருவர் உள்ளம் – துணை நடிகை
  4. அன்னை இல்லம் – துணை நடிகை
  5. படகோட்டி – துணை நடிகை
  6. கர்ணன் – துணை நடிகை
  7. கலைக்கோயில் – துணை நடிகை
  8. நீர்க்குமிழி – துணை நடிகை
  9. முகராசி – துணை நடிகை
  10. கார்த்திகை தீபம் – துணை நடிகை
  11. காதல் படுத்தும் பாடு – துணை நடிகை
  12. பாமா விஜயம் – கதாநாயகி
  13. பக்த பிரகலாதா – துணை நடிகை
  14. எதிர் நீச்சல் – கதாநாயகி
  15. இரு கோடுகள் – கதாநாயகி
  16. நில் கவனி காதலி – துணை நடிகை
  17. புன்னகை – கதாநாயகி
  18. நூற்றுக்கு நூறு – துணை நடிகை
  19. புதிய வாழ்க்கை – துணை நடிகை
  20. கண்ணா நலமா – கதாநாயகி
  21. வெள்ளி விழா – கதாநாயகி
  22. கங்கா கௌரி – கதாநாயகி
  23. பெண்ணை நம்புங்கள் – கதாநாயகி
  24. மணிப்பயல் – கதாநாயகி
  25. நல்ல முடிவு – துணை நடிகை
  26. சண்முகப்ரியா – துணை நடிகை
  27. எல்லோரும் நல்லவரே – துணை நடிகை
  28. குல கௌரவம் – கதாநாயகி
  29. தேவதை – கதாநாயகி
  30. மாப்பிள்ளை சார் – துணை நடிகை
  31. நானும் இந்த ஊருதான் – துணை நடிகை
  32. பாலைவனப் பறவைகள் – துணை நடிகை
  33. சார் ஐ லவ் யூ – துணை நடிகை
  34. ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் – துணை நடிகை
  35. வீட்டைப்பாரு நாட்டைப்பாரு – துணை நடிகை
  36. கோபாலா கோபாலா – துணை நடிகை
  37. செங்கோட்டை – துணை நடிகை
    38.புதல்வன் – துணை நடிகை
  38. ஹவுஸ்புல் – துணை நடிகை
  39. அன்னை காளிகாம்பாள் – துணை நடிகை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.