May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

நள்ளிரவு-நல்லிரவு/ சொல் ஆராய்ச்சி/ முத்துமணி

1 min read

Midnight-Goodnight / Word Research / Muthumani

27/7/2021
நல்லிரவு… நன்மை+ இரவு.. இவ்வாறு பிரிந்து, நல்ல இரவு என பொருள் தரும். இச்சொல் புதிய வரவு. ஆனால் நம் மரபுக்குள் நில்லாதது, என்பதே சிக்கல். ஆங்கிலத்தில் குட் என்பதை நன்மை என்றும் நைட் என்பதை இரவு என்றும் மொழிபெயர்த்து பின்னர் இரண்டு சொற்களையும் புணரச் செய்து இச்சொல்லை உருவாக்கினர்.
facebook..
முகநூல் என்பது போல… இதுவும் அப்பட்டமான….நகல்… உப்புமா என்று இங்கிருந்து salt flour என்று அங்கு போனால் என்ன? அங்கிருந்து good night நல்லிரவு என இங்கு வந்தால் என்ன?… ஊசிப் போய்விட்டது..needle gone தானே!!!

ஒருவரைப் பார்த்து ஆங்கிலத்தில் good night என இரவு நேரத்தில், அவர் படுக்கைக்குச் செல்லுமுன் வாழ்த்தும் வழக்கத்தை ஆங்கிலேயர் வைத்திருக்கின்றனர். மேல்நாடுகளில் பழக்கமுண்டு. அவர்கள் good night என்று சொல்வதில், இந்த இரவு முழுவதும் உங்களுக்கு இனிமையான இரவாக அமையட்டும் என்பது பொருள்படும். அதைப்போலத்தான் good morning என்பதும்… ஆனால் நல்லிரவு… என்று தமிழில் நான் சொல்லும்போது அந்தப் பொருள் படாது. நல்ல இரவு என்பதை மட்டும்தான் குறிக்கும்.
“நல்ல இரவு நேரம் ஒருவன் வந்து என் வீட்டின் கதவைத் தட்டிவிட்டான்”….
“நல்ல தூக்கம். அப்போது வந்து அருகில் இருந்ததைத் தூக்கிச் சென்று விட்டான்”…..
” நல்ல இருட்டு. அதனால் என் காலில் கடித்தது எதுவென்று தெரியவில்லை”…
” நல்ல வெய்யில் வேர்த்துக் கொட்டி விட்டது”… “அவன் நல்ல உழைப்பாளி. இவன் நல்ல சோம்பேறி”.
இப்படியெல்லாம் சொல்லும் இடத்தில் இந்த ‘நல்ல’ அல்லது ‘நன்மை’ என்ற இந்தப் பண்புப் பெயர்…. என்ன பொருள் தருகிறது என்பதைப் பாருங்கள்?. நல்ல இரவு என்றால் கடுமையான இரவு நேரம். நல்ல பசி என்றால் கடுமையான பசி. நல்ல வெய்யில் என்றால் பயங்கரமான வெய்யில்.. நல்ல தூக்கம் என்றால் ஆழ்ந்த தூக்கம்…. இப்படிப் பொருள் படும்போது ஒருவரைப் பார்த்து’ ‘நல்லிரவு’ என்று வாழ்த்துவது எப்படி முறையாகும்? ஆங்கில மரபைப் பின்பற்றும்போது இப்படித்தான் தவறு செய்வோம்….
“இந்த இரவு உங்களுக்கு இனிமையாக அமையட்டும்” என்று வாழ்த்திப் பழகுவோம்….. இன்னும் சிலர் ஆங்கில மரபைப் பின்பற்றியே good என்பதற்கு நன்மை என்ற பொருள் வைத்துக்கொண்டு ‘நற்காலை வணக்கம்’ என்று சொல்கிறார்கள் ‘இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் ,என்பது தான் மிகச் சரியானது இதை நான் ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்..
நல்லிரவு இருக்கட்டும்…

அடுத்தது நள்ளிரவுக்கு வருவோம்…
இது நம் முன்னோர் பயன்படுத்திவந்த ஒரு நல்ல சொல். ஒரு வீட்டில் 3 மகன்கள் இருந்தால், முதலில் உள்ளவன் மூத்தவன் மூன்றாவது பையன் இளையவன். இருவருக்கும் நடுவில் உள்ளவன் அதாவது இரண்டாவதாகப் பிறந்தவன் நள்ளவன்… இப்படித்தான் எங்கள் ஊரில் சொல்வர்.
எங்கள் வீட்டில் நான்தான் நள்ளவன்.. என்னைவிட மூத்தவர் மூவர் இளையவர் மூவர்… “மூத்தவன்(பெரியவன் என்றும் சொல்வதுண்டு) சாப்பிட்டுவிட்டுத்தான் படுத்தானா?” “இளையவன்(சின்னவன்) இன்னும் வரவில்லையா!”” நள்ளவன் என்ன சாப்பிட்டான்?” என்று என் தந்தை என் தாயிடம் கேட்கும்போது,
சிறுவயதில் நான் நினைப்பதுண்டு, நாம்தான் மிகவும் நல்லவன் போலும்…… அது நல்லவன் இல்லை, நள்ளவன் என்பதும் அதன் பொருளும் பின்னர்தான் புரிந்தது. நடுவில் பிறந்தவன்… முதலில் பிறந்தவன் பெரியவன் அல்லது மூத்தவன். கடைசியில் பிறந்தவன் இளையவன் அல்லது சின்னவன். இடையில் பிறந்தவர் நள்ளவன்…

அப்படியானால் தசரதன் பிள்ளைகளின் நள்ளவன் யார்.. என்ற கேள்வி எழக்கூடும்… நாவவர் இருக்கும் வீடுகளில் இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளையும் நள்ளவன் என்று குறிப்பிடுவதும் உண்டு . “நீதான் மூத்தவனா?” என்று பெரியவர்கள் கேட்கும் போது, ” இல்லை நான் நள்ளவன்” என்று பதில் கூறுவதுண்டு.
பஞ்சபாண்டவர்களில் நள்ளவன்.. அர்ஜுனன். அவனுக்கு மூத்தோர் இளையோர் இருவர்.. பிற்காலத்தில் நள்ளவன் என்னும் இச்சொல் வழக்கொழிந்து போய்,’ நடு உள்ளவன்’ என்னும் சொல் உண்டாயிற்று… இலக்கியங்களில் இச் சொல் வழக்கத்தில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தில் மொழி வழக்கில் இருந்தது.
அப்படியானால் நள் என்பது நடு என்னும் பொருளில் வருகிறதல்லவா?… இரவை நள்ளிரவு என்று சொல்லும்போது நடுநிசி நடுஇரவு எனும் பொருள்படுகிறது…
இப்போது தெளிவு பெறுவோம்.

நல்லிரவு… என்னும் சொல் இரவின் அடர்த்தியையும் ஆழத்தையும் குறிக்கிறது..
நள்ளிரவு என்னும் சொல் நேரத்தின் அடிப்படையில் மிகச்சரியாக நடு இரவைக் குறிக்கிறது…
நள்ளிரவு என்பது இரவின் உச்சம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்… அதுவும் இரவு 12 மணியாகத்தான் இருக்கும்… ஏனெனில் அதன் பிறகு மறுநாள் தொடங்கி விடுகிறது அல்லவா?..

-தமிழ் முத்துமணி….

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.